உலகக்கோப்பை போட்டிக்கு முன் எங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, அங்கு ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. உலகை அச்சுறுத்தும் பலம் கொண்டதாக பார்க்கப்படும் அந்த அணி, இந்தத் தொடரில் எதிரணியை பெரிதாக சோதிக்கவில்லை. இந்தத் தொடரில் ஆஸி. அணிக்கு எதிராக 481 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது. ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடித் தோற்றது.
முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 34.4 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிங்கிய இங்கிலாந்து அணி ஆஸி. பவுலர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணற, 114 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், நிதானமாக ஆடிய ஜாஸ் பட்லர் 110 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன்மூலம், 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து.
இந்தத் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ‘இந்தத் தொடர் முழுவதும் எங்கள் அணி சிறப்பாகவே செயல்பட்டது. தவறுகளை திருத்திக்கொண்டு பல்வேறு முன்னேற்றங்களை எட்டினோம். ஆனாலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. உலகக்கோப்பைக்கு இன்னமும் நிறைய அவகாசம் இருக்கிறது. அதனால், எங்கள் வீழ்ச்சி குறித்து எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். 2019ல் மிகச்சிறப்பாக செயல்படுவோம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.