இந்திய கிரிக்கெட் அணியில் இளம் விக்கெட் கீப்பராக இடம் பெற்றிருக்கிறார் ரிஷப் பாண்ட். ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி அணி சார்பில் அதிரடியாக விளையாடி ரன்குவித்த ரிஷப், இந்தியா ஏ அணியிலும் சிறப்பாக ஆடினார். அதேசமயம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பியிருந்த தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடததால், அவரது இடத்தை ரிஷப் பாண்ட் பிடித்துக் கொண்டார்.
மிகவும் சிறிய வயது, துடிப்பான வீரர் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்ட பாண்ட், இயல்பாகவே அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் அவர்மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களே சொதப்பி வரும் நிலையில், அனுபவமற்ற ரிஷப் பாண்ட் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்கு ஆகுவார். கீப்பிங் சமயத்தில் அவரது ஃபூட் ஒர்க்கும் முறையாக இல்லை என பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ரிஷப் பாண்ட் அணியில் நீடிப்பது குறித்த விவாதங்கள் எழத் தொடங்கிவிட்டன.
உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் இதுபற்றி பேசுகையில், “ரிஷப் பாண்ட் மிகச்சிறந்த வீரர். வெறும் 20 வயதேயான அவருக்கு அணியில் அதிகளவு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தேர்வு வாரியமும் முழு கவனம் செலுத்தவேண்டும். வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் பாண்ட் மனதில் பயத்தை ஏற்படுத்தி விடும். அவரும் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். பொதுவாக ஒரு அணியின் தலைசிறந்த வீரர் ஓய்வு பெற்றுவிட்டால், அங்கு ஒரு வெற்றிடம் ஏற்படும். எங்களுக்கு வார்னே, இந்தியாவுக்கு சச்சின், ட்ராவிட் என சிலர் இப்படி அதை அடுக்கிக் கொண்டே போகலாம். தோனி ஓய்வான பிறகு இன்று இந்தியாவில் விக்கெட் கீப்பருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சரியான ஆளை இந்தியா கூடிய விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.