நேற்றைய போட்டிக்குப் பின் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளம்மிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தோனி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். பழைய ஃபார்மை மீட்டெடுக்க அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது அவருக்கு கால் முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், களத்தில் அவரால் வேகமாக ஓட முடியவில்லை'' எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ''தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அசைவுகளில் அதை நீங்கள் கணலாம். அது அவருக்கு சிறு தடையாக உள்ளது. அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். அதில் சந்தேகம் இல்லை. அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை வழி நடத்துவார்” என பயிற்சியாளர் ஃப்ளமிங் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிளெமிங், ''மகாலா ஃபீல்டிங் செய்தபோது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரால் கடைசி இரு ஓவர்களை வீச முடியவில்லை. இதேதான் தீபக் சாஹருக்கும் ஏற்பட்டது. எனவே நாங்கள் அணியில் இருப்பவர்களை வைத்தே விளையாட வேண்டும். மொயின் அலி அணிக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு இது சரியான நாள் இல்லை. ஆனால் அவர் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆகாஷ் போன்ற இளம் வீரர்கள் தங்களது முதல் போட்டியில் விளையாடும் போதே சில முக்கியமான ஓவர்களை வீச வேண்டி இருந்தது. ஆனால் நாங்கள் இப்படி திட்டமிடவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் திட்டங்கள் என்பது மிக அரிதாகவே செயல்படும்” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து சென்னை அணியில் தீபக் சாஹர், தோனி, ஸ்டோக்ஸ், மகாலா ஆகியோர் காயத்துடன் இருப்பது சென்னை அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.