உலக கோப்பையின் 23 வது லீக் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் 50% முடிந்த நிலையில், உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து உட்பட 4 அணிகள் ஒரு வெற்றியுடன் தடுமாறி வரும் நிலையில், முதல் 4 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும், வங்கதேச அணியும் மோத உள்ளது. வங்கதேச அணிக்கு இன்று வெற்றி பெற்றால் தான், அரை இறுதி வாய்ப்பில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதால், அந்த அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாகும்.
தென்னாப்ரிக்க அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முயலும். காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் இந்த போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் வான்கடே மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருப்பதால், இது வங்கதேச அணிக்கு பெரிய பலமாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிறப்பாக செயல்படுவதால் அந்த அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி 18 முறையும், வங்கதேச அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை கடைசியாக இவ்விரு அணிகளும் சந்தித்துக் கொண்ட 2007 மற்றும் 2019 உலக கோப்பைகளில் வங்கதேச அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருப்பதால், அந்த வரலாறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு சற்று கவலை தரக்கூடிய வகையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியை, நெதர்லாந்து அணி வீழ்த்தி இருப்பதாலும், கடந்த உலகக் கோப்பைகளில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உள்ளதாலும், தங்களால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு வங்கதேச வீரர்கள் களமிறங்குவார்கள் என்பதால், இன்றைய போட்டி சிறப்பானதொரு ஆட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வெ. அருண்குமார்