உலக கோப்பையின் 32 வது லீக் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா 24 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். பின்னர் இணைந்த டி காக், வேன் டெர் டுசைன் இணை நியூசிலாந்து பந்து வீச்சை பொறுமையாக எதிர்கொண்டாலும், அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் என வான வேடிக்கை காட்டினர். சிறப்பாக ஆடிய டி காக் இந்த உலகக் கோப்பையில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். பின்னர் வேன் டெர் டுசைன் , மில்லர் உடன் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார். சதம் அடித்த அவர் தனது அதிரடியை நிறுத்தவில்லை. ஒரு பக்கம் மில்லர் சிக்ஸர்களில் கவனம் செலுத்த, டுசைன் பவுண்டரி மற்றும் சிக்ஸர் என விளாசி, 118 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வழக்கம் போல அதிரடி காட்டிய மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி 2 விக்கெட்டுகளும் , போல்ட், நீசம் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே இரண்டு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திராவும் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். யங் மட்டும் நிதானமாக அடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் பிலிப்ஸ் மட்டும் அரைசதம் கடந்து 60 ரன்கள் எடுக்க, மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக மகராஜ் 4 விக்கெட்டுகளும் ஜான்சன் 3 விக்கெட்டுகளும், ஜெரால்ட் 2 விக்கெட்டுகளும், ரபாடா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக விளையாடி 133 ரன்கள் எடுத்த வேன் டெர் டுசைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 23 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 357 ரன்கள் குவித்ததன் மூலம் உலக கோப்பைகளில் 350 க்கும் மேற்பட்ட ரன்களை 9 முறை அடித்த அணி என்னும் ஆஸ்திரேலியா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. உலகக் கோப்பை லீக் போட்டிகளில் 5 ஆட்டங்களில் 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 100க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்னும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், ஒரு அணியாக ஒரு உலக கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்னும் இங்கிலாந்தின் சாதனையை (76) முறியடித்து அதிக சிக்ஸர்கள் ( 82) அடித்த அணி என்கிற வரலாறு படைத்துள்ளது.
- வெ.அருண்குமார்