உலகக் கோப்பை 2023ன் 37 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய ரோஹித், கில் இணை அதிரடியுடன் தொடங்கியது. ரோஹித் 264 அடித்த ஈடன் கார்டன் மைதானம் என்பதால், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் மட்டுமே அடிப்பேன் என்று முடிவு எடுத்து ஆடினார். இதனால் தென் ஆப்பிரிக்க பவுலர்களும், பீல்டர்களும் செய்வதறியாது திகைத்தனர். ரோஹித் அதிரடி மூலம் இந்திய அணி 5 ஓவர்களுக்குள்ளேயே 50 ரன்களைக் கடந்தது. பவுண்டரி அடிக்க முற்பட்டு ரோஹித் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கோலியுடன் இணைந்த கில் நிதானமாக ஆடினார். 23 ரன்களில் கில்லும் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் மற்றும் கோலி இணை மிகவும் பொறுமை காட்டியது. ஷ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுலும் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யா 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர ஓரளவு உதவினார். ஆனால் கடந்த ஆட்டத்தைப் போலவே க்லெளவில் பட்டு கேட்ச் ஆனார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் கோலி தன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தான் ஏன் இன்னும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். சிறப்பாக ஆடிய கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 ஆவது சதத்தைக் கடந்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த மாஸ்டர் சச்சினின் சாதனையை சமன் செய்தார். கோலியின் 35 ஆவது பிறந்த நாளான இன்று இந்த சதம் அடிக்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும். இறுதியில் ஜடேஜாவின் அதிரடியான 29 ரன்கள் உதவியுடன், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி, ஜான்சென், மஹராஜ், ஷம்சி, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது.
தொடர்ந்து சிறப்பாக ஆடி சதங்கள் குவித்து வந்த டி காக் 5 ரன்னில் வெளியேறி இந்திய ரசிகர்களை நிம்மதி அடைய வைத்தார். கேப்டன் பவுமா 11 ரன்களில் வெளியேறி இம்முறையும் ஏமாற்றினார், மார்க்ரம் 9, க்ளாசென் 1, மில்லர் 11, வேன் டர் டசன் 13 என அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் மற்றும் சிராஜ் ஒரு விக்கெடையும் கைப்பற்றினர். இதன் மூலம் ஜடேஜா, உலகக்கோப்பை போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது வீரரானார். முதல் வீரராக முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் உள்ளார். சிறப்பாக ஆடி தனது 49 ஆவது சதத்தைப் பதிவு செய்த கோலி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் இந்திய அணி முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
இந்த தோல்வியானது தென் ஆப்பிரிக்க அணியின் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக வித்தியாசம் கொண்டது. இதன் மூலம், இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மிக அதிக ரன்கள் வித்தியாசம் கொண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
- வெ.அருண்குமார்