தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலீஸ்டர் குக்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 1 - 3 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா தொடரை இழந்திருந்தாலும், கடைசி போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு விளையாடி வருகிறது. கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது.
தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று இரண்டு விக்கெட் இழப்புக்கு, 238 ரன்களுடன் 278 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலீஸ்டர் குக், இந்தத் தொடர் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்த குக், சதத்தைத் தவறவிட்டார். இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதம் அடித்தே தீரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பார்வையாளர்களில் சிலர் சமையல்காரரைப் போல வேடமணிந்து குக்கிற்கு உற்சாகமளித்தனர். அவர் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கு மைதானமே அலறியது. 210-வது பந்தை எதிர்கொண்ட குக் சதமடித்து அசத்தினார். தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் சதமடித்த உற்சாகத்தில் குக் புன்னகைத்த படி மட்டையை உயர்த்திக் காட்டியது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.