ஆண்டு தோறும் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ இந்தியாவில் ஐ.பி.எல் திருவிழா தொடங்கிவிடும். இதுகுறித்தான எதிர்பார்ப்பு அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே, அனைவரிடமும் கரோனா வைரஸ் தொற்றை விட வேகமாக தொற்றிக்கொள்ளும். அணி நிர்வாகங்களும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தங்களது அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பெரும் தீனியிடத் தவறுவதில்லை. இந்தாண்டும் வழக்கம் போல இவை அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, கரோனா காரணமாக ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்டது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனையடுத்து கரோனா தொற்று குறைவாக உள்ள அமீரகத்தில் இப்போட்டியை நடத்த திட்டமிட்டு, பின் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பி.சி.சி.ஐ வெளியிட்டது.
அமீரகத்தில் முகாமிட்டு அனைத்து அணிகளும் உற்சாகமாக தங்களைத் தயார்படுத்த ஆரம்பித்த வேளையில், சென்னை அணிக்கு மட்டும் சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. முதலில் ஒரு பந்துவீச்சாளர் மற்றும் உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், சென்னை அணி வீரர்கள் மட்டும் கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் முடங்கியிருந்தனர். இதனால், சென்னை அணியின் முதற்கட்ட பயிற்சியானது தடைபட்டது. சூழலுக்குப் பொருந்த முடியாமல் சென்னை அணி வீரர்கள் தடுமாறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
முன்னணி வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதும் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இவ்விரு வீரர்களின் விலகலால் அணிக்குப் பெரிய அளவில் பாதிப்பில்லை என்று அணி நிர்வாகத்தால் முன்னர் கூறப்பட்டு வந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை அணி நிர்வாகம் தற்போது அவதானித்திருக்கும்.
பல பின்னடைவுகள் இருந்தாலும், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை சென்னை அணி வெற்றியுடன் துவக்க, பரம எதிராளியான மும்பையை வீழ்த்தியது, துவக்கத்தில் எழுந்த தடைகளில் இருந்து மீண்டு வந்தது என சென்னை அணி ரசிகர்கள் கூடுதல் உற்சாகமானார்கள். அவ்வெற்றி தந்த உற்சாகம் அடங்குவதற்குள் அடுத்தடுத்த தோல்விகள் கண்டு தற்போது அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. 13 வருட ஐ.பி.எல் வரலாற்றில், பங்கெடுத்த அனைத்து தொடர்களிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி முதல்முறையாக துவக்கச் சுற்றிலேயே வெளியேறுவது சென்னை அணி ரசிகர்களை வருத்தத்திற்கும், எதிரணி ரசிகர்களின் கிண்டல்களை எதிர்கொள்ள முடியாத நிலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
சென்னை அணியின் தோல்விக்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணங்களை முன்வைத்து வருகிறது. இவ்வருட ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதுமே, பலரது கவனமும் சென்னை அணி மீதே திரும்பியது. 'மிதமான தட்பவெட்ப நிலை கொண்ட இடங்களில், வயது மூத்தவர்களைக் கொண்டு விளையாடிப் பழகிய சென்னை அணி அமீரகச் சூழலை இந்த வீரர்களைக் கொண்டு எப்படி எதிர்கொள்ளும்' என்ற கேள்வி எழுந்தது. இருந்தபோதிலும், அணி கேப்டன் தோனி மீது இருந்த அதீத நம்பிக்கை இக்கேள்விகளை எல்லாம் தவிடு பொடியாக்கியது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட தோனி, இனி எந்த நெருக்கடியும் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அவர் மீது ரசிகர்கள் கொண்ட அளவுக்கதிகமான எதிர்பார்ப்பே, களத்தில் தோனியை தடுமாற வைத்துவிட்டது. நடப்பு தொடரில் சென்னை அணி வெளிப்படுத்திய ஆட்டத்தை அடிப்படையாக வைத்து தோல்விக்கான காரணத்தை ஒரு வரியில் கூறவேண்டுமென்றால், ஒரு அணியாக இணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எனக் கூறலாம். வழக்கமாக துவக்கப்போட்டி முதலே யார் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று தெளிவாக தீர்மானித்து விளையாடக்கூடிய சென்னை அணி, இவ்வருடம் மட்டும் யாரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் உறுதியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது. அணியின் கேப்டனான தோனி களமிறங்க வேண்டிய இடம் எது என்பதே உறுதியாக தீர்மானிக்கப்படாதது அபத்தத்தின் உச்சம்.
அணியில் வயதானவர்கள் நிரம்பி விட்டனர் என்ற குற்றச்சாட்டு கடந்த மூன்று வருடமாகவே எழுந்து வந்தாலும், அது எவ்வளவு உண்மை என்பதை அமீரகச் சூழல் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது. கடினமான தட்பவெட்பநிலை கொண்ட சூழலில் விளையாடும்போது வீரர்கள் தடுமாறுவது இயல்பானதுதான். உலகின் சிறந்த உடற்தகுதி கொண்ட வீரர்களுள் ஒருவரான விராட் கோலியே இந்த சூழலில் தடுமாறினார் எனும்போது, சற்று வயது மூத்தவர்கள் தடுமாறுவதில் ஆச்சரியமில்லை. அதேவேளையில், இதை காரணமாகக் கூறிக்கொண்டே இருக்க முடியுமா என்பதை அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என சரியான கலவையில் அணி அமைவதே எதிர்காலத்தில் சென்னை அணியை முன்னணி அணியாக ஐ.பி.எல் வரலாற்றில் தக்க வைக்க உதவும்.
எத்தனை போட்டிகளில் தோற்றாலும் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் என்று எதிரணி ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு எல்லாம் அசராமல், தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களே சென்னை அணியின் மிகப்பெரிய பலமாகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என அதிரடி மாற்றங்களை அணித் தேர்வில் செய்து, எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு அணியாக சென்னை அணி மீண்டு(ம்) வர வேண்டும் என்பதே விசில் போடத் தயாராக இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.