
சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் பிரபல வணிக வளாகத்தில் வாகனங்களை நிறுத்த முதல் ஒரு மணி நேரத்திற்கு வாகன நிறுத்தத்திற்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதே சமயம் தமிழக கட்டட ஒருங்கிணைந்த விதிகள் படி வணிக வளாகங்களில் போதுமான வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இதற்காகத் தனியாகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே என்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்ற செயல் ஆகும். எனவே ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை நுகர்வோர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது வணிக வாளகத்தின் சார்பில் வாதிடுகையில், “தமிழக கட்டட ஒருங்கிணைந்த விதிகள் படி வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கூறப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நுகர்வோர் ஆணையம், “வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும் வணிக வளாகம் சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே வணிக வளாகத்தில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 12 ஆயிரம் ரூபாயை வணிக வளாகம் வழங்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், “வணிக வளாகங்கில் மின் தூக்கி, மின் படிக்கட்டு, கழிவறை, வாகன நிறுத்துமிடம் அடிப்படை வசதிகள் பிரிவில் வருமா? இல்லையா? என்பதற்கு விடைக்கான நுகர்வோர் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை” என்பதையும் நுகர்வோர் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.