சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பலமுறை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தத் தகவலில், கடந்த 2011 - 2012 காலகட்டத்தில் நடந்த 15 சர்வதேச போட்டிகளில், 24-க்கும் அதிகமான மேட் பிக்ஸிங் சூதாட்ட சம்பவங்களை வீரர்கள் அரங்கேற்றி இருக்கின்றனர். அதில் ஏழு போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களில் சிலரும், ஐந்து போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரும், மூன்று போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் சிலரும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்திருக்கிறது.
லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுடன் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி, தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி மற்றும் துபாயில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடிய தொடர் என சில போட்டிகளை அல்ஜசீரா நிறுவனம் இந்த விவகாரத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனால், இந்தத் தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள விளக்கத்தில், அல்ஜசீராவின் தகவல்கள் தெளிவானதாக இல்லை. முன்னாள் - இன்னாள் வீரர்களின் நடத்தையிலும், ஒற்றுமையிலும் எந்தவிதமான சந்தேகமும் எழவில்லை எனக்கூறி இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.