Skip to main content

உங்கள் ஃபிட்னஸை கண்காணிக்க இந்தியாவுக்கு வருகிறது ஃஸியோமி ஸ்மார்ட் பேண்ட் 3

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

ஃஸியோமி (xiaomi, MI) நிறுவனம் செப்டம்பர்  மாதம் 27 – ஆம் தேதி பெங்களுருவில்  நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தனது நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. பேண்ட் 3, ஏர் ப்யூரிஃபையர், செக்யூரிட்டி கேமரா, ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல தனது புதிய தயாரிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. 
 

mi

 


ஃபிட்னஸ் பேண்ட் 3 இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் ஃபிட்னஸ் பேண்ட்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஃஸியோமி. குறைந்த காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமானது. மேலும், இந்தியாவில் அதிக அளவு  பயன்படுத்தப்படும் பேண்ட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய பேண்ட் 3–ல் இதயத் துடிப்பை அளவிடும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.  பேண்ட் 2–ல் இருந்ததை விட கூடுதல் அம்சங்கள் கொண்டும், கொள்ளளவு 0.78 அங்குலம் கொண்ட  திரையுடனும்   பேண்ட் 3 வெளிவர உள்ளது. 

வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங், ஸ்லீப்பிங் தொடர்பான தகவல்களை துல்லியமாக கணித்து, பயனாளர்களுக்கு மொபைல் மூலம் தரும். நமக்கு வரும் தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளை, இந்த பேண்ட் மூலம் தவிர்க்கலாம். பேஸ்புக் அறிவிப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ், வெதர் இன்பர்மேஷன்,  வாட்ஸ்அப் மெசேஜ் ஆகியவற்றை நாம் இந்த பேண்ட்ன் திரை வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும்   பேண்ட் 3, வாட்டர் ப்ரூப் திறன் கொண்டது. 50 மீட்டர் ஆழம் வரை நீந்திக்  கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

ப்ளூடூத் 4.2 வசதி மற்றும் 10 செ.மீ. தூரத்தில் உள்ள கருவியுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறும் வசதி உள்ளிட்ட பல அம்சங்களுடன்  பேண்ட் 3 வெளிவர உள்ளது. ஒரு முறை ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்டு, பின்பு மொபைல் சாதனத்துடன் இணைக்கப்படவில்லை என்றால்கூட அது கண்காணிக்கப்படும் அளவுக்கு பேண்ட் 3 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.3490 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய ஃஸியோமி ஸ்மார்ட் கேமராவும்  விழாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தயாரிப்பு சீனாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் கேமரா 360 டிகிரி சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த முகப்பு ஸ்மார்ட் கேமரா மிகவும் மலிவான விலையில், ரூ.2999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஹோம் ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமரா இரவு நேரங்களில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் அம்சத்தையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. 
 

 

mi


ஃஸியோமி நிறுவனம் இதற்கு முன்னதாகவே டிவி 4 சீரிஸ் கொண்டு ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது.  இந்த நிலையில் டிவி 4சி,  டிவி 4எஸ், டிவி 4எக்ஸ் என்ற மூன்று விதமாக ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த உள்ளது ஃஸியோமி. இந்த டிவிக்களின் அளவு 32 அங்குலம் முதல் 55 அங்குலம் வரை இருக்கும். மேலும், வாய்ஸ் ரிமோட் அம்சமும் கொண்டு, ஸ்மார்ட் டிவி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டிவிக்களின் விலை ரூ.11,000 முதல் ரூ.29,999 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் ஏர் ப்யூரி ஃபையர் 2-எஸ் என்ற புதிய ஸ்மார்ட் ப்யூரி ஃபையர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை ஃஸியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. ஃஸியோமி நிறுவனம் இதற்கு முன்னதாகவே ஏர் ப்யூரிஃபையரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. 

 

mi

 

பெங்களுருவில் ஃஸியோமி நிறுவனம் நடத்தும்  நிகழ்ச்சியில்  ஸ்மார்ட் ட்ராவலிங்  சூட்கேஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஃஸியோமி 90 பாயிண்ட் சூட்கேஸ்  1 ஏ என்ற பெயரில் அறிமுகம் செய்கிறது. இது ஜெர்மனியின் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய  பொருள்  கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே நான்கு சக்கரங்கள், நான்கு திசைகளிலும் சுழலும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை சூட்கேஸ் வெளிவர உள்ளது. சிறியதின் விலை 3200 ரூபாயாகவும், பெரியதின் விலை  4500 ரூபாயாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் 27 – ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஃஸியோமி நிறுவனம் இன்னும் பல தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.