ஊசி என்று சொன்னாலே ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடும் நபர்களை நாம் இன்றும் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமின்றி ஊசிக்கு பயப்படுபவர்கள் லிஸ்டில் வயது வந்தவர்களும் இருக்கின்றனர். ஊசி செலுத்துவதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன, மருத்துவர்கள் எவ்வாறு அதைச் சரியாகக் கையாளுகின்றனர் என்பது குறித்து டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்.
ஊசிக்கான சிரிஞ்ச் தயாரிக்கும் கம்பெனி ஒரு இரும்பு ஆணி தயாரிக்கும் கம்பெனி போல் இருக்காது. தொடக்கம் முதல் இறுதி வரை உணவுப்பொருட்கள் தயாரிப்பதை விட 100 மடங்கு அதிக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றித்தான் இதன் தயாரிப்பு நடக்கும். முக்கால்வாசி இது மெஷின்களால்தான் தயாரிக்கப்படும். மனிதர்களின் மூச்சுக்காற்று கூட அதன் மேல் படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும். கம்பெனிக்குள் தனி உடைகள், மாஸ்க் என்று கட்டுப்பாடுகள் இருக்கும். கிருமிகள் உள்ளே செல்ல முடியாது.
தயாரித்ததிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வரை பாதுகாப்பாக வைத்திருத்தல் கடைப்பிடிக்கப்படும். வெப்பநிலை அளவு பார்த்து ஊசிகள் சேமித்து வைக்கப்படும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி வீசப்பட்டாலும் அதன் தயாரிப்பில் எந்த விதமான சமரசமும் செய்துகொள்ளப்படமாட்டாது.