இன்றைய டெக்னாலஜி, அவசர யுகத்தில் நாம் விரும்பியதை உண்கிறோம், அது தரமானதா, சுகாதாரமானதா எனப் பார்ப்பதில்லை. அதேபோல் நீர், நிலம், காற்று அனைத்தும் மாசடைந்துள்ளது. நாம் சுவாசிக்கும் காற்று நச்சாக உள்ளது, அது நமது உடலுக்குள் சென்று நம் உடலை நோய்களின் உல்லாசபுரியாக மாற்றுகிறது.
நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், நமது உடல் நலன் சிறப்பாக இருக்கவேண்டும், நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பிறந்த குழந்தை முதல் வயதான முதியோர் வரை கட்டாயம் அந்தந்த காலத்துக்கு ஏற்ற தடுப்பூசி நாம் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து மருத்துவர் ரம்யா அய்யாதுரையிடம் நாம் கேட்டறிந்தோம். அவற்றைக் கேள்வி பதிலாக இங்கே தொகுத்துள்ளோம்....
எந்த வயது வரை தடுப்பூசி எடுக்கவேண்டும்?
பிறந்த குழந்தை, சிறுவர், பெரியவர்கள், முதியோர் என எல்லா வயதினரும் அந்தந்த வயதில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்க தடுப்பு ஊசிகள் உள்ளன. அதனை அவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும்.
பெரியவர்கள் ஏன் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்?
சிறுவயதில் எடுத்த தடுப்பு ஊசியின் செயல்திறன் பலவருடங்கள் ஆனபிறகு அதன் வீரியம் குறையும் . இதற்கு உதாரணம் ரணஜன்னி, தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் தீவிரமாகின்றன. அதற்கு நாம் செலுத்திக்கொள்ளும் தடுப்பூசி செயல்திறன் நமது உடம்பில் பத்து ஆண்டுகள் வரையே செயல்படும். அதன்பின் வீரியம் குறைந்துவிடும். அதனால் 10 வருடங்களுக்கு ஒருமுறை இவற்றைத் தடுக்கும் தடுப்பு ஊசி எடுக்கவேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் இருந்து படிக்க அல்லது வேலைக்குச் செல்லும் முன்பு அந்த நாடுகளின் சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி சிலதடுப்பு ஊசிகள் கட்டாயமாக எடுக்கவேண்டும் என்கிறது.
இளைஞர்களுக்கே தடுப்பூசி கட்டாயம் என்கிறது அந்நாட்டு சுகாதாரத்துறை. காரணம் இப்போது நோய்கள் அடுத்தவருக்குச் சுலபமாகப் பரவுகின்றன. பெரியவர்கள், முதியவர்களுக்கு உடலில் வயது கூடக்கூட இதயம், ஈரல், சிறுநீரக பாதிப்பு உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் மூலம் அவர்களுக்கு தொற்றுநோய் மற்றும் நிமோனியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவை வராமல் தடுக்கவும், பெண்களுக்குக் கருப்பை வாய்ப்புற்று நோய் வராமல் தடுக்கவும் பெரியவர்களுக்குத் தடுப்பூசி பயன்படுகிறது.
பெரியவர்களுக்கு என்னென்ன தடுப்பு ஊசிகள் உள்ளன ?
நிமோனியா தடுப்பு ஊசி - PPSV 23, PCV 13, ஃபுளுகாய்ச்சல் தடுக்க இன்ஃபுளுன்சா தடுப்பு ஊசி , ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் தடுக்க Tdap ஊசி, கருப்பைவாய், பிறப்பு உறுப்பு புற்று நோய் தடுக்க HPV தடுப்புஊசி, சின்னஅம்மை தடுக்க – Varicella, தட்டம்மை , பொன்னுக்குவீங்கி தடுக்க MMR , ஈரல் தொற்று தடுக்க hepatitis B மற்றும் hepatitis A போன்ற தடுப்பு ஊசிகள் உள்ளன.
இந்த தடுப்பு ஊசிகளால் யார் யார் பயனடைவார்கள்?
தடுப்பு ஊசி எடுப்பவர்களுக்கு நோய்தொற்று ஏற்படாது, நாம் தடுப்பு ஊசி எடுப்பதால் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கலாம். உதாரணத்திற்கு கோவிட் தொற்று.
தடுப்பு ஊசிகள் எந்த காலகட்டத்தில் எடுக்கவேண்டும் ?
60 வயது தாண்டிய முதியோர் கட்டாயமாக 5 வருடங்களுக்கு ஒருமுறை நிமோனியா தடுப்பு ஊசி எடுக்கவேண்டும். ஃபுளுதடுப்பு ஊசியை ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கவேண்டும். தொண்டை அடைப்பான் ரணஜன்னி தடுப்பு ஊசி 20 வயது முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை எடுக்கவேண்டும். சிறுவயதில் சின்னஅம்மை தாக்கவில்லை என்றால் பெரியவர்கள் varicella தடுப்பு ஊசி எடுக்கவேண்டும். 20 வயது தாண்டியதும் ஒரு MMR கூடுதல் தடுப்பு ஊசி எடுப்பது நல்லது. 20 முதல் - 45 வயது வரை உள்ள ஆண், பெண், திருநர் என அனைவரும் பிறப்பு உறுப்பு புற்றுநோய் தடுக்க HPV எடுத்துக்கொள்ளவேண்டும். ஈரல், இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி அவர்களுக்கு எந்த தடுப்பு ஊசி அத்தியாவசியம் என்று அறிந்து அதன்படி எடுத்துக்கொள்ளலாம்.
தடுப்பு ஊசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
சில தடுப்பு ஊசிகள் முட்டையில் நுண்கிருமிகளை வளர்த்து தயாரிக்கப்படுகின அதனால் ஒவ்வாமை ஏற்படலாம். இது தவிர தடுப்பு ஊசி எடுத்த இடத்தில் வலி வீக்கம் ஏற்படலாம், சிலருக்கு காய்ச்சல் கூடவரலாம். இவற்றைத் தவிர தடுப்பு ஊசி எடுப்பதில் பெரிய பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது.