மழைக் காலங்களில் பலவகை காய்ச்சல் உருவாகிறது. அவற்றில் ஒருவகை எலிக் காய்ச்சல் ஆகும். இந்த வகை காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது. அதனால் எந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்று ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் இராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.
டெங்கு காய்ச்சல், மலேரியா போன்று இதுவரை எத்தனையோ வகையான காய்ச்சல்களைப் பார்த்திருப்போம். ஆனால் எலிக் காய்ச்சலைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த வகை காய்ச்சல் மழைக்காலத்தில் ஏற்படக்கூடியது. ஸ்பைரோகீட் என்ற விசக்கிருமியால் ஏற்படக்கூடியது. இந்த கிருமி பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீரால் பரவக்கூடியது.
நோயால் பாதிக்கப்பட்டு இறப்பு நிலையை அடையும் எலி, சாவதற்கு முன் அதிகப்படியான சிறுநீரை வெளியேற்றும். அந்த சிறுநீரில் உள்ள விசக்கிருமிகள் மழைக்காலங்களில் தேங்கிய தண்ணீரில் கலக்கும். அங்கிருந்து பரவும் வேலை தொடங்கும். மழைத்தண்ணீரை வெறும் காலில் மிதிப்பதால் காலின் பாதத்தினை துளைத்துக் கொண்டு மனித உடலுக்குள் செல்லும். ஒரு வேளை கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்தாலோ, கீறல் காயங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலோ ஸ்பைரோகீட் கிருமிக்கு உடலுக்குள் செல்வதற்கு இன்னும் இலகுவாகி விடும்.
ஒரு பெரிய விஐபிக்கு தீவிரமான காய்ச்சல் ஏற்பட்டது. ஏதேதோ சோதனை செய்தும் சிகிச்சை செய்தும் சரியாகவில்லை. நான் தான் எலிக் காய்ச்சல் சோதனை செய்து பார்க்கலாமே என்றேன். அவரோ பெரிய விஐபி எங்குமே செருப்பு போட்டு போகாமல் போகமாட்டார், வீட்டுக்குள் கூட செருப்பு அணிவார். அவருக்கு எப்படி ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று சக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அவரிடம் பேசிய போது கோவிலுக்குள் செருப்பு போடாமல் போனதாகவும் அங்கே ஒரு எலி செத்துக் கிடந்ததையும் பார்த்ததாகவும், மழை நீர் தேங்கி இருந்ததில் கால் நனைத்ததாகவும் சொன்னார். பிறகு எலிக் காய்ச்சலுக்கான சோதனை செய்து பார்த்தபோது நோய் உறுதியானது. அதற்கான சிகிச்சை கொடுத்து குணமாக்கினோம்.
அதனால் மழைக் காலங்களில் ஏற்படுகிற காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த வகை காய்ச்சலால் கல்லீரல், கிட்னி, நரம்பு மண்டலம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எனவே மழைக் காலங்களில் எலிக் காய்ச்சலையும் மனதில் வைத்து நாம் வரும் முன் காப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.