இளம் வயதிலேயே சிலர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறக்கும் சூழலை சமீப காலமாக பார்க்கிறோம். இதற்கு என்னதான் காரணம் என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் முன் வைத்தோம். அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு..
கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் சமீபத்தில் அதிக அளவில் ஹார்ட் அட்டாக் வருவதாக சொல்லப்படுவது முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது. பெரும் ஆய்வில் கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். கொரோனா பெரிய பாதிப்பை நம்மிடையே ஏற்படுத்திச் சென்றது என்பது உண்மை தான். உறவுகளை இழந்தவர்களின் வலியை நம்மால் உணர முடிகிறது.
இதய நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் பெரிய தொடர்பு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது தூக்கத்தினை தொலைத்த சமுதாயமாக இருக்கிறோம். இரவுகளின் அதிக நேரம் கண் விழிக்கிறோம். அதற்கு பல காரணிகள் நம்மிடையே இருக்கிறது. இரவு நேர வேலை வாய்ப்புகள், இரவு நேர சினிமா, இரவு நேர கொண்டாட்டங்கள் என்று தூக்கத்தினை தொலைக்கிறோம்.
கொரோனா காலத்தில் சரியாக தூங்காமல் எல்லாரும் இரவு தூங்க நேரமாகிறது. பெரியோர்களிடமிருந்து இந்த பழக்கம் சிறியவர்களையும் தொற்றிக் கொண்டது. மீண்டும் பகலில் தூங்காமல் இரவு மட்டுமே தூங்கி, குடும்பத்தோடு இந்த பழக்கத்தை கொண்டு வந்தால் சரி செய்ய முடியும். இல்லையென்றால் குழந்தைகள் தூக்கமின்மையால் உடலும் மனமும் கெட்டுப் போகும். இது அவர்களுக்கு இதய நோயை நோக்கித்தான் நகர்த்திச் செல்லும்.
தூக்கமின்மையினால் மட்டுமே தான் பல்வேறு சிக்கல்கள் ஆரம்பிக்கிறது. தூக்கமின்மை சரியான உணவு உண்ணாமையை கொண்டு வரும், அது இதய நோய் சிக்கலாகத்தான் மாறும், அதனால் அட்டாக் வரத்தான் செய்யும். எனவே நன்றாக தூங்கி நன்றாக உணவு உண்டு ஆரோக்கிய வாழ்வு முறையைப் பின்பற்றி ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.