தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், தூக்கம் குறைந்தால் அதனால் கண்களில் என்ன பிரச்சனை ஏற்படும் என்றும் கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்குகிறார்
தலை வலி என்று என்னிடம் யாராவது வந்தால் அவர்கள் சரியாகத் தூங்கினார்களா என்று நான் முதலில் கேட்பேன். இல்லை என்பார்கள். தூக்கம் வராமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் செல்போன் பார்ப்பது தான். மொபைல் பார்க்கும்போது கண்ணும் மூளையும் முழுமையாக ஆக்டிவாக இருக்கும். அந்த வெளிச்சம் இருப்பதால் தூக்கம் சுத்தமாக வராது. ஆழ்ந்த தூக்கமே மனிதர்களுக்கு நல்லது. சின்ன சத்தத்துக்கு கூட எழுந்து விடும் நபர்கள் இருக்கிறார்கள். அதில் பெருமை எதுவும் இல்லை. ஆழ்ந்த தூக்கம் தான் தேவை. குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
தூங்காமல் வேலை செய்வது நல்லதல்ல. சரியான தூக்கம் வரவில்லை என்றாலே நம்முடைய உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். தூக்கமின்மையால் கண்ணில் வலி, எரிச்சல் ஆகியவை ஏற்படும். கண் பார்வையில் குறைபாடு ஏற்படும். உணவை உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இப்போது நாம் நியூஸ் பார்ப்பதே செல்போனில் தான். ப்ளூ-ரே வெளிச்சத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் கண்ணாடிகளை அணிய வேண்டும். இதன் மூலம் கண்களை நம்மால் பாதுகாக்க முடியும். கண்புரை நோய்களிலிருந்து தப்பிக்க முடியும்.
விரைவில் செரிமானம் ஆகக்கூடிய எளிமையான உணவுகளை இரவில் எடுத்துக்கொண்டால் நல்ல தூக்கம் வரும். இரவு 9 மணிக்கு தூங்குவது நல்லது. மேற்கத்திய நாடுகளில் சீக்கிரமாக உண்டு சீக்கிரமாகத் தூங்கும் பழக்கம் இருக்கிறது. அதை நாமும் பின்பற்றலாம்.