சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மை தீமை பற்றியும், அதில் ஹார்மோன் ஊசி பயன்பாடு பற்றியும், சில கேள்விகளை மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்காக அவர் அளித்த விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.
பல நாடுகளில் எளிய மக்களுக்கு புரதச்சத்து கிடைக்கிற மிக முக்கியமான உணவாக சிக்கன் மட்டுமே இருக்கிறது. அதுவும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட அளவு கறியும், முட்டையும் கிடைக்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. அதில் புரதமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதும் அந்த முட்டையிலிருந்து ஒரு கோழிக் குஞ்சு வர வேண்டும் அது வளர்ச்சி அடைந்து நல்ல நிலையில் வர வேண்டும் என்பது வரை மனிதனுக்குப் பயன் உள்ளதாகத்தான் அமைகிறது. முட்டை என்கிற திரவத்திலிருந்து ஒரு உயிர் உருவாகும் என்பதாலேயே முட்டையை பாலுக்கு நிகரான சத்துள்ள இடத்தில் வைத்திருக்கிறோம்
எந்த அளவுக்கு நம் முட்டை புரதச்சத்து நிறைந்தது என்றால் கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நமது நாமக்கல்லில் இருந்து கோடிக்கணக்கான முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது தமிழர்களுக்குப் பெருமை தானே. அந்த அளவுக்கு முட்டையிலும் சிக்கனிலும் கிடைக்கும் புரதம் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால், 120 நாட்கள் வளர வேண்டிய கோழிகளுக்கு 90 நாட்களில் சீக்கிரம் வேகமாக வளர்ந்து பலன் தர வேண்டி வளர்ச்சிக்காக ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. சிறியதாக இருக்கும்போதே போடப்படும் ஊசியானது 90வது நாளில் வெட்டப்படும்போது அதில் ஹார்மோனின் தாக்கம் இருக்கிறதா என்று ஒவ்வொரு கோழிக்கும் தனித்தனியாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் சிலருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது.
உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படும் போது எங்கேயாவது சோதனை செய்யப்பட்டு தீங்கு நிறைந்தது என்று தெரிந்தால் அவ்வளவும் கடலுக்குள் தானே கொட்டி அழிக்கப்படும். அதனால் கவனமாகத்தான் சிக்கன் உற்பத்தி செய்ய வேண்டும். அதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.