நம்மில் பெரும்பாலான மக்கள் தினமும் மூன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம். அப்படி தினமும் நேரம் பார்த்து சரியாக மூன்று வேளைகள் தினமும் நான் சாப்பிடுவேன் என்று சொல்பவர்களுக்கு நோய்தான் வரும். 'ஒழுங்காக நேரத்துக்கு சாப்பிட்டால் எப்படி நோய் வரும்?' என்று கேட்பவர்கள் இதை கவனிக்கவும்.
இன்றைய அவசர உலகத்தில் எல்லோரும் காலையில் எழுந்த உடன் அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று தங்கள் அன்றாட பணிக்குச் செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் பெரும்பாலும் காலையில் 8 மணிக்கு சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் சில பேர் காலையில் 10 மணிக்கு சாப்பிடுகிறார்கள். அப்புறம் அலுவலகத்தில் உணவு இடைவெளி என்று மதியம் 1 மணிக்கு சாப்பிடுகிறார்கள். அப்படி காலை உணவு உண்டவர்கள் மீண்டும் மதியம் சாப்பிடும் பொழுது உண்மையாக நமக்கு பசி எடுத்துதான் சாப்பிடுகிறோமோ? பலர் 'இல்லை' என்றே பதில் சொல்வார்கள்.
ஏதோ 'உணவு இடைவேளை இருக்கு, அதுக்காக நான் சாப்பிடுகிறேன்' என்று சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. எப்படி என்று கேட்டால் காலையில் நாம் 9 மணிக்கு சாப்பிடுகிறோம், அதன் பிறகு அந்த உணவுக்கு ஏற்றவாறு நாம் வேலை செய்யவில்லை அல்லது பெரிதாக எந்த வேலையும் நம் உடலுக்குக் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். பிறகு மதிய உணவு இடைவேளை வந்த உடன் நாம் என்ன நினைக்கிறோம்? மதிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே? ஆனால் நம் உடலில் உண்மையில் பசி இருக்கிறதா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. காலையில் சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாத நிலையில் மதிய உணவும் எடுத்துக் கொண்டால் அந்த உணவும் ஜீரணம் ஆகாது. இதனால் உடலில் ஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜீரணக் கோளாறு தொடர்ந்தால் அது இன்னும் பெரிய உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
நம் உடலில் தினமும் மூன்று வேளை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. இன்னும் ஒரு சிலருக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் அவர்கள் ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை கூட சாப்பிடலாம். ஏனென்றால் அவர்கள் உடலில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சீக்கிரமாக சுரந்து விடும். அது ஜீரணத்தை விரைவுபடுத்தும். ஒரு சிலர் உடல் உழைப்பு குறைவாக இருக்கும், அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் கூட போதுமானது. எனவே இன்று முதல் பசித்து உண்ணுவோம்.
நேரா நேரத்துக்கு சாப்பிடவேண்டுமென நம் முன்னோரும் தாய்மாரும் சொன்னது சரிதான். முன்னோர் சொன்னதில் பல விஷயங்களை மறந்துவிட்ட நாம் இதை மட்டும் மறக்காமல் பின்பற்றுகிறோம். சொன்னதை தற்போதுள்ள வாழ்வியல் முறைக்கு ஏற்றபடி பொருத்திப்பார்த்து பின்பற்றுவோம்.