Skip to main content

திருக்குறளில் உள்ள இந்த சொல், தமிழ்ச் சொல்லா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #6

Published on 31/05/2018 | Edited on 09/07/2018

சொற்களை அறிவதற்கு அகரமுதலிகளைப் புரட்டுவதுதான் தலைசிறந்த ஒரே வழி. அகரமுதலி என்றால் அகராதிதானே என்று கேட்பீர்கள். ஆம். அகராதி என்றாலும் அகரமுதலி என்றாலும் ஒன்றே. “அகர முதல எழுத்து” என்பது ஐயன் வள்ளுவனின் தொடக்கம். அகரத்தைத் தொடக்கமாகக் கொண்ட, அகர வரிசைப்படி அமைக்கப்பட்ட சொற்பொருள் களஞ்சியம்தான் அகராதி. அகரத்தை ஆதியாக – தொடக்கமாகக் கொண்ட நூல் என்பதே அகர ஆதி – அகராதி என்ற சொல்லின் தோற்றுவாய். 

 

thirukkural



இடைக்காலத்தில் ஆதி என்பது வடசொல் என்று சிலர் கூற முனைந்தனர். செந்தமிழ்ச் சொற்கள் தொகுக்கப்படும் பெருநூலின் தலைப்பிலேயே வடசொல் இருப்பது தகாது என்று கருதிய தனித்தமிழ் அறிஞர் பெருமக்கள் ஆதி என்பதற்கு முதல் என்ற தமிழ்ச்சொல்லை நேராகக் கொண்டனர். அகரத்தை முதலாகக்கொண்ட நூல் என்னும் பொருளில் அகரமுதலி என்று கூறத்தொடங்கினர். இதுதான் அகராதி அகரமுதலி ஆன வரலாறு. என்னுடைய அறியாச் சிறுவத்தில் நான் அகராதிக்கும் அகரமுதலிக்கும் வேறுபாடு தெரியாமல் விழித்திருக்கிறேன். இன்றும் இவ்விரண்டையும் கேட்பவர்கள் அகராதி, அகரமுதலி ஆகிய சொற்களால் தடுமாறி நிற்பதுண்டு. பிற்பாடு தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியாக “ஆதி” என்பதற்கும் தமிழ்வேர்த்தன்மை உண்டு என்று நிறுவினர். திருக்குறளில் இடம்பெற்றுள்ள எச்சொல்லும் பிறமொழிச் சொல் இல்லை, அவை அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களே என்று நிறுவுகின்ற ஆய்வு முடிவுகளும் இருக்கின்றன.

 

 


அகராதி எனப்படுகின்ற அகரமுதலியை நாடுவதுதான் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ள நல்ல வழி. ஓர் அகராதியை எப்படி அணுகுவது என்று நான் சொல்வதற்கு முன்னால் தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையைச் செலுத்திவிடுவோம். என்னிடம் எல்லாரும் தவறாமல் கேட்கின்ற வினாக்களில் ஒன்று “ஐயா… நல்ல தமிழ் அகராதியைப் பரிந்துரைக்க முடியுமா…?” என்பதே. ஒரு மொழியில் எழுதப்பட்ட நூல்களில் - இலக்கியமானாலும் சரி, இலக்கணமானாலும் சரி, சொற்பொருள் தொகுப்பானாலும் சரி… காலத்தால் பழையவையே சிறப்பானவை என்பதை முதற்கண் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மொழிப்பிரிவு நூல்களில் காலத்தால் முந்தியவற்றின் தகைமை குறித்து நாம் புதிதாக எதையும் கூற வேண்டியதில்லை.

 

 

 

tamil dictionery



அகராதியைப் பொறுத்தவரையில் வீரமாமுனிவர் தொகுத்த “சதுரகராதி” என்னும் நூல்தான் காலத்தால் பழையது. அந்நூல் கிபி. 1732இல் வெளியாயிற்று. அதற்கும் முன்பாக எட்டாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிகண்டுகள் எனப்படுகின்ற நூல்கள் தமிழில் தோன்றி வழங்கின. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகியவை முறையே எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. நிகண்டுகள் எனப்படுபவை ஒரு சொல்லுக்கு வழங்கப்படுகின்ற பல பொருள்களையும் ஒரு பொருளுக்கு வழங்கப்படுகின்ற பல சொற்களையும் தொகுத்துக் கூறுபவை. அகராதி என்னும் நூலில் செய்யப்படும் செயலும் அதுதான். அதனால் நிகண்டுகள் என்றதும் அஞ்சி ஒதுங்க வேண்டா.

 

 

 


சதுரகராதி முதற்று அண்மைக்காலத்தில் வெளியாகியுள்ள கிரியா தற்காலத் தமிழ் அகராதி வரைக்கும் ஏறத்தாழ ஐம்பது அகராதி நூல்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. அந்நூல்கள் வெளியான காலம், பொருட்படுத்தத் தக்க வெளியீட்டாளர், தொகுப்பாசிரியர் ஆகியவற்றின் வழியே இவ்வெண்ணிக்கை கொள்ளப்படுகிறது. அண்மைக் காலத்தில் அகராதி தொகுக்கும் முயற்சியில் தனிப்பட்ட ஆர்வலர்கள்தாம் ஈடுபட்டார்களேயன்றிப் பல்கலைக்கழகங்களோ தமிழ் அமைப்புகளோ அரசோ ஈடுபடவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இவற்றிடையே நமக்கு வேண்டிய அகராதி நூல் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் ?     

 

 

முந்தைய பகுதி:

கலவி தெரியும்... கண்கலவி தெரியுமா? சொல்லேர் உழவு #5
 


அடுத்த பகுதி:



தண்டனை வழங்குவதற்கு நிகரான தமிழ்ச்சொல் தெரியுமா??? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 7

 

 

 

 

Next Story

ஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41

Published on 10/07/2019 | Edited on 17/07/2019

கட்டளைப் பொருள் தருகின்ற வினைவேர் தன்னோடு வெவ்வேறு விகுதிகளைச் சேர்த்துக்கொண்டு புதிய புதிய தொழிற்பெயர்களை உருவாக்கும். நில், செல், வா, போ, செய், காட்டு, ஆடு, பாடு என்று கட்டளையிடுகின்ற எல்லாமே வினைவேர்கள் ஆகும். வினைச்சொற்களாகிய அவற்றிலிருந்தே வினைமுற்றுகளும் எச்சவினைகளும் தோன்றுவதால் வினைவேர் என்கிறோம். பெயர்ச்சொற்களை உருவாக்குவதற்கு வினைச்சொற்கள் இங்கே உதவி செய்கின்றன. 
 

soller uzhavu


ஒரு வினைச்சொல்லை அப்படியே தொழிற்பெயராக்கி விடுவதன் வழியாக அத்தொழிலின் வழியே நிகழ்த்தப்படும் அனைத்துக்கும் பெயர்ச்சொற்களை அடையலாம். அவ்வாறுதான் நம்முடைய புதிய பெயர்ச்சொற்கள் பலவும் உருவாகியிருக்கின்றன. பழங்காலத்திலும் அவ்வாறே பல சொற்கள் ஆக்கப்பட்டன.

வினைவேர்கள் என்பவை கட்டளைப் பொருள் தருபவை. இங்கே விகுதிகள் எனப்படுபவை எவை? தொழிற்பெயர்களை உருவாக்குவதற்காக ஒரு வினைவேரில் இறுதி நிலையாய்ச் சேர்ந்து கொள்பவையே தொழிற்பெயர் விகுதிகள் எனப்படும். நேரடியாக எடுத்துக்காட்டுகட்குச் செல்வோம்.

செய் என்னும் ஒரு வினைவேரினை எடுத்துகொள்வோம். அதனோடு தல் என்ற விகுதி சேர்ந்தால் செய்தல் (செய் + தல்) என்ற தொழிற்பெயர் கிடைக்கும். எதனைச் செய்தாலும் அதனைச் செய்தல் என்னும் பெயராகக் கூறலாம். 

அல் என்ற விகுதியினைச் சேர்த்தால் செய்+அல் = செயல் என்னும் தொழிற்பெயர் கிடைக்கும். செய்வதன் வழியாக நடக்கும் வினையைச் செயல் என்கிறோம். 

செயல் என்பதனை முன்னொட்டாகக்கொண்டு இன்னொரு கட்டளைப் பொருள் தரும் வினைவேரினைச் சேர்த்தால் மற்றொரு வினைச்சொல் கிடைக்கும். படு என்ற வினைவேரைச் சேர்த்துப் பார்ப்போம். செயல்படு என்ற வினைச்சொல் கிடைக்கிறது. படு என்ற வினைவேர் முன்னிலை (வினைச்சொல் பகுதி) திரிந்தால் பாடு என்றாகும். செயல்படு என்ற கட்டளைப் பொருள் தரும் வினைச்சொல் அவ்வாறு திரிந்து செயல்பாடு என்ற பெயர்ச்சொல் கிடைக்கிறது. 

செய் என்ற வினையோடு கை என்ற விகுதி சேர்த்தால் செய்கை (செய்+கை) என்ற இன்னொரு தொழிற்பெயர் கிடைக்கிறது. 

தி என்றொரு தொழிற்பெயர் விகுதியும் இருக்கிறது. அதனோடு செய் என்னும் வினையைச் சேர்த்தால் செய்தி என்ற அருமையான தொழிற்பெயர் கிடைக்கிறது. வு என்ற தொழிற்பெயர் விகுதி சேர்த்தால் செய்வு என்ற தொழிற்பெயரை உருவாக்கலாம்.

ஒரே வினைவேர்தான். அவ்வினையாற் பெறப்படும் விளைவு சார்ந்த எவ்வொன்றுக்கும் வெவ்வேறு விகுதிகளைச் சேர்த்து பலப்பல தொழிற்பெயர்களை உருவாக்கிவிட்டோம்.


செய்தல் – நலம் செய்தல், பணி செய்தல், நடவு செய்தல், முடிவு செய்தல், ஆவன செய்தல்

செயல் – கொடுஞ்செயல், நற்செயல், அனிச்சைச் செயல், இழிசெயல்.

செயல்பாடு – சமூகச் செயல்பாடு, அரசின் செயல்பாடு. 

செய்கை – தவறான செய்கை, எச்சரிக்கை செய்கை, பயிர்செய்கை,    

செய்தி – இன்றைய செய்தி, முக்கியச் செய்தி, செய்தித்தாள், செய்தித் தொலைக்காட்சி.

ஒரேயொரு வினைவேர்தான். அது செய் என்பது. அதனோடு சில விகுதிகளைச் சேர்த்ததும் வெவ்வேறு தொழிற்பெயர்கள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வோர் இடத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொண்டோம். பயன்படுத்தப்பட்ட ஒவ்வோர் இடத்தில் அந்தச் செயல், செயல் விளைவு, செயல் சார்ந்த அனைத்துக்கும் அதனையே பெயராக்கிவிட்டோம். அதனோடு தொடர்புடைய மேலும் சில சொற்களைச் சேர்த்துக்கொண்டால் புதிய புதிய சொற்றொடர்கள் புதிய புதிய பொருளோடு நம்முடைய பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன. 

ஒரேயொரு வினைவேர் அதனுடைய வினைப்பொருளோடு தொடர்புடைய எவ்வொன்றுக்கும் தொழிற்பெயராகி நிற்கும். அத்தொழிற்பெயர்களைப் பயன்படுத்தி மேலும் பல சொற்களோடு சேர்த்து புதிய சொல்லாட்சியைக் கண்டடையலாம். அவ்வாறு பயன்பாட்டில் நிலைத்தவுடன் அச்சொல் அதே வினைவேரினால் பெறப்பட்ட இன்னொரு தொழிற்பெயரை இடையூறு செய்வதில்லை. 

எடுத்துக்காட்டாக இதனைப் பாருங்கள், செய்தி என்ற சொல் ‘நிகழ்ந்தவொன்றின்’ அறிவிப்பாக நிற்கின்றது. அது எப்போது செயல் என்ற சொல்வழியே நாம் பெற்றுக்கொண்ட பொருளுக்குக் குறுக்கே செல்வதில்லை. ஏனென்றால் செய்தி, செயல், செய்கை, செயல்பாடு போன்ற சொற்கள் அவற்றுக்குரிய பயன்பாடுகளில் நிலைத்துவிட்டன. இப்படித்தான் ஒரு புதிய சொல் உருவாக்கப்படுகிறது. பயன்பாட்டில் நிலைக்கிறது. இதன் ஆணிவேர் தொழிற்பெயர் உருவாக்கம் என்னும் இலக்கணத் தன்மைக்குள் ஒளிந்திருக்கிறது.


முந்தைய பகுதி: 

 கொடுப்பினையா, கொடுப்பனையா ? தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40

 

 

Next Story

கொடுப்பினையா, கொடுப்பனையா ? தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40

Published on 26/06/2019 | Edited on 17/07/2019

தொழிற்பெயர்களைப் பற்றிய இலக்கணப் பகுதிகளாகட்டும், நம் பாடத்திட்டங்களாகட்டும், போகிற போக்கில் ஒரு விளக்கத்தைக் கொடுத்துவிட்டு எளிமையாகக் கடந்துவிடுகின்றன. நம் மாணாக்கர்களும் அதனை ஒரு பத்தியளவில் படித்து முடித்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம் பெயர்ச்சொற்களின் அடிப்படைகள் பலவும் அங்கேதான் பொதிந்திருக்கின்றன. புதிதாய் ஒரு பெயர்ச்சொல்லை ஆக்கும் வாய்ப்பும் தொழிற்பெயரில்தான் அமைந்திருக்கின்றது. அதன் இன்றியமையாமையை உணர்ந்திருந்தால் தொழிற்பெயர் குறித்து ஆழ்ந்து கற்பித்திருப்பர். ஒவ்வொருவரும் பெயர்ச்சொல் ஆக்கும் திறனை வளர்த்துக்கொண்டிருப்பர்.
 

soller uzhavu


முதலில் தொழிற்பெயர் என்றால் என்ன என்று பார்க்கலாம். தொழிற்பெயர் என்பது வேறொன்றுமில்லை. ஒரு வினையைக் குறிக்கின்ற பெயர்தான் தொழிற்பெயர் எனப்படும். ஒரு வினை என்பது ஏவல் பொருள் தரும் தன்மையோடு இருக்கும். வா, வருகிறான், வந்தது, வந்து ஆகிய அனைத்துமே வினைச்சொல் வடிவங்கள்தாம் என்றாலும் அச்சொற்கள் அனைத்திற்கும் வா என்பதே வேர். அதனை வினைவேர் என்றும் சொல்வார்கள். வினைவேர்கள் இடுகுறித்தன்மையோடு தானாகத் தோன்றியவை. நம் மொழியின் ஆணிவேர்கள் என்று கருதத்தக்க சொற்கள். அவை ஏவல் பொருள் தரும். வா என்ற ஒரு வினைவேரிலிருந்து வந்தான், வந்தாள், வந்தார்கள், வந்தது என பல வினைமுற்றுகள் பிறக்கின்றன. வந்து, வந்த,  வர, வருகின்ற போன்ற எச்சவினைகள் பிறக்கின்றன. வருகை, வரவு, வருமானம், வருதல், வரும்படி போன்ற தொழிற்பெயர்களும் பிறக்கின்றன. இந்தத் தொழிற்பெயர்கள்தாம் புதுப்பெயர்ச்சொற்களை ஆக்கிக் கொள்வதற்கான அகன்ற வாயில்கள்.  

ஏவல் பொருள் தரும் வினைவேர்ச்சொல் தானாகவே ஒரு பெயர்ச்சொல்லாகப் பயிலும். அடி, உதை, குத்து, இடி, கொதி முதலான வினைச்சொற்கள் கட்டளைப்பொருளும் தந்து வினைவேராகப் பயில்கின்றன. அந்தந்த வினைகளைக் குறிக்கும் பெயர்களாகவும் பயன்படுகின்றன. ஓர் அடி அடி, ஒரு குத்து குத்து… இத்தொடர்களைப் பாருங்கள். இவற்றில் அடி என்று பெயராகவும் வருகிறது. அடி என்று வினையாகவும் ஏவுகிறது. இத்தகைய பெயர்களை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்பார்கள். முதனிலை என்பது வினைவேரைத்தான் குறிக்கிறது. வினைவேர்ச் சொல்லே பெயர்ச்சொல்லுமாகி அந்த வினையை, தொழிலைக் குறிப்பதால் முதனிலைத் தொழிற்பெயர் என்று பெயர் பெற்றது.

கெடு, பெறு, விடு, படு, அறு போன்ற வினைவேர்ச்சொற்களின் முதலெழுத்து நெடிலாகத் திரிந்தால் போதும். கேடு, பேறு, வீடு, பாடு, ஆறு என்னும் பெயர்ச்சொற்கள் ஆகிவிடும். வினைவேராகிய முதனிலையே இவ்வாறு நெடிலாகத் திரிந்து பெயர்ச்சொல்லாவதால் இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் எனப்படும். கெடுவதன் வழியே அடையப்படுவது கேடு. பெறுவதன் வழியே கிட்டுவது பேறு. விடுவதால் கிடைப்பது வீடு (வீடுபேறு). நிலத்தை அறுத்துச் செல்லும் தன்மையால் அது ஆறு.

மேற்சொன்ன வினைவேர்கள் அவ்வகையால் மட்டுமே பெயராகின்றனவா ? வேறு வகையில் பெயராவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா ? ஆம். இருக்கின்றன. முதனிலைத் தொழிற்பெயர்களும், முதனிலை திரிந்த தொழிற்பெயர்களும் மட்டுமின்றி இன்னொரு வகையும் இருக்கின்றது. அதற்கு விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று பெயர்.

மேற்சொன்ன வினைகளோடு தல் என்ற ஒரெயொரு விகுதியைச் சேர்த்துக்கொள்வோம். என்னென்ன தொழிற்பெயர்கள் கிடைக்கின்றன ? விகுதி என்பது வேறொன்றுமில்லை. ஒன்றோ சிலவோ எழுத்துகளால் ஆகி ஒரு சொல்லின் கடைசியில் ஒட்டிக்கொள்ளும் சொல்லுருபுதான் விகுதி எனப்படும். இங்கே தல் என்பது தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்று.

தல் என்பதனை மேற்சொன்ன வினைவேர்களின் விகுதிகளாக்கிப் பார்ப்போம். என்னென்ன தொழிற்பெயர்ச்சொற்கள் கிடைக்கின்றன ? அடித்தல், உதைத்தல், குத்துதல், இடித்தல், கொதித்தல் என்று ஆகிவிட்டன. அடி என்ற ஒரு வினைவேர் அடி என்ற முதனிலைத் தொழிற்பெயருமாயிற்று. அடித்தல் என்ற தல் விகுதி பெற்ற தொழிற்பெயருமாயிற்று. அடி என்ற வினைவேரைக்கொண்டு வேறு என்னென்ன தொழிற்பெயர்களை ஆக்கலாம் ? அடித்தல் எனலாம். அடிப்பு எனலாம். இப்படி வெவ்வேறு விகுதிகளைச் சேர்ப்பதன் வழியாகப் பலப்பல தொழிற்பெயர்களை ஆக்கிக்கொள்ளலாம். அந்தத் தொழில்வழியாக நிகழ்கின்ற எவ்வொரு செயலுக்கும் செயற்கருவிக்கும் அதனையே பெயராக்கலாம்.

தொழிற்பெயர் விகுதிகளாகத் தக்கன என்று இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட விகுதிகளைச் சொல்கிறார்கள். ஒரு வினைவேரோடு அவ்விகுதிகளில் பலவற்றையும் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களாக்கலாம். தொழிற்பெயர் விகுதிகளாவன எவை ? தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரபு, ஆனை, மை, து போன்றவை தொழிற்பெயர் விகுதிகள்.

அடக்கு என்று ஒரு வினைவேர் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனோடு மேற்சொன்ன தொழிற்பெயர் விகுதிகளைச் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களை உருவாக்கலாம்.


தல் விகுதி சேர்த்தால் அடக்குதல்

அல் விகுதி சேர்த்தால் அடக்கல்

அம் விகுதி சேர்த்தால் அடக்கம்

கை விகுதி சேர்த்தால் அடக்குகை

ஒரு வினைவேரினைக் கொண்டு இங்கே நான்கு தொழிற்பெயர்களை உருவாக்கிவிட்டோம்.

இவை மட்டுமின்றி இன்னும் என்னென்னவோ தொழிற்பெயர் விகுதிகள் நூல்களிலும் பேச்சு வழக்குகளிலும் மறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டடைந்தால் தமிழின் ஒரு வினைவேரை வைத்துக்கொண்டு எண்ணற்ற சொற்களை ஆக்கலாம். எடுத்துக்காட்டாக, பனை என்பதும் தொழிற்பெயர் விகுதிதான். அதன் வழியேதான் கற்பனை, விற்பனை, கொடுப்பனை, படிப்பனை போன்ற தொழிற்பெயர்கள் உருவாகின்றன. பனை என்பதே தொழிற்பெயர் விகுதி என்பதால் கொடுப்பனை, படிப்பனை என்பதுதான் சரி. கொடுப்பினை, படிப்பினை என்பது தவறு.   

இப்போது நமக்குத் தொழிற்பெயர்களைப் பற்றித் தெரியும். தொழிற்பெயர் விகுதிகளும் தெரியும். அவற்றிலிருந்து தொழிற்பெயர்களை எவ்வாறெல்லாம் உருவாக்கலாம் ? அவற்றை எத்தகைய பொருள்களில் பயன்படுத்தலாம் ? அடுத்து பார்ப்போம்.

 

முந்தைய பகுதி:

 

புதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி ?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39
 

அடுத்த பகுதி:

ஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41