Skip to main content

புத்தகச் சாதனையில் கலக்கும் பெண் கவிஞர் மரிய தெரசா!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Maria Theresa, the female poet who sucess in the book record!

 

ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடவே படாதபாடு படவேண்டிய இந்த கரோனா நெருக்கடிக்கு நடுவிலும், ஒரே நேரத்தில் 20 புத்தகம், 30 புத்தகம் என்று எழுதி வெளியிட்டு இதுவரை நூறு புத்தகத்துக்கு மேல் வெளியிட்டு கின்னஸை நோக்கிப் பயணிக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் மரியதெரசா. இவர் கதை, கவிதை என எழுதிக் குவித்து, அவற்றை நூற்றுக்கணக்கான நூல்களாக வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் சாதனை பெண்ணாக வலம் வருகிறார். அவரைப் பற்றிய சாதனைத் தகவல்களை அவரது குரலிலேயே கேட்போம்.

 

”எனக்குச் சொந்த ஊர் காரைக்கால். அப்பா ரெபேர் சேழான். அம்மா பிளான்ஷேத் சேழான். எனக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் இருக்கிறார்கள். தமிழில் எம்.ஏ., பி.எச்.டி, இந்தியில் இரண்டு எம்.ஏ., மற்றும் இரண்டு பி.எட்., ஆங்கிலத்தில் எம்.ஏ., படித்துள்ளேன். சென்னையில் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக 32 வருடங்கள் பணிபுரிந்தேன். பணி ஓய்வு பெற்று சில வருடங்களாகிறது. என்னுடைய அம்மா கவிதைகள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார்கள். அவருடைய  படைப்புகளை நூலாக வெளியிட்டோம். அம்மா வழி தாத்தாவும் கவிதைகள் எழுதுவாராம். அந்த வழியில் ஈடுபாடு ஏற்பட்டு நானும் கவிஞராக, எழுத்தாளராக உருவாகியிருக்கிறேன்.

 

98-ம் வருடம் 'நிழல் தேடும் மரங்கள்' என்ற புதுக்கவிதை நூலினை வெளியிட்டேன். அதன்பின்னர் இதுவரை மரபுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் என ஒரே மேடையில் 20 நூல்கள், 40 நூல்கள் என இதுவரை 100 நூல்களை வெளியிட்டுள்ளேன். இதையடுத்து மேலும் 100 நூல்களை எழுதி முடித்து, அதுவும் வெளியிட தயாராக இருக்கிறது. கரோனா ஊரடங்கு காலம் முழுமையாக முடிவுக்கு வந்தபின் விழா  நடத்தி அவற்றை ஒரே மேடையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். இதுவரை பெண் படைப்பாளிகள் எவரும் இத்தனை நூல்களை ஒரே நேரத்தில் வெளியிட்டதில்லை என்றுசொல்லி  பலரும் பாராட்டுவது எனக்கு மகிழ்வைத்  தருகிறது.

 

மேலும் இன்னொரு  50 நூல்களை எழுதத் தொடங்கி, அந்த எல்லையையும் நெருங்கிவிட்டேன். அந்த வகையில் 250 நூல்கள் எழுதிய முதல் பெண் படைப்பாளி என்ற பெருமையை விரைவில் எட்டுவேன். கவிஞர்கள் பலரும் மூன்று வரிகளில் துளிப்பா, ஹைக்கூ, சென்ரியூ என வகைப்படுத்தி எழுதுவது வழக்கம். நானும் அவ்வகை கவிதைகள் எழுதியுள்ளேன். மேலும், மோனைக்கூ, எதுகைக்கூ, மூன்றியோ, பழமொன்ரியூ, போதனைக்கூ, முரண்கூ, குறள்கூ, நெடில்கூ, குறில்நெடில்கூ என புதுவகை கவிதைகளையும் நான் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன்.  மோனைக்கூ, எதுகைக்கூ அந்தாதி, தன்முனை அந்தாதி, மோனைக்கூ அந்தாதி, நெடில்கூ அந்தாதி, குறில்நெடில்கூ அந்தாதி எனவும் வகைப்படுத்தி எழுதி வருகிறேன். அவ்வகை நூல்கள் அச்சில் இருக்கின்றன. இந்த வகை நூல்களும் கவிதை வடிவத்தில் எனது புது முயற்சி!

 

பெரும்பாலும், சமூகத்தில் நடக்கும் அநீதிகள்தான் என்னை எழுதத் தூண்டுகின்றன” என்று தன்னம்பிக்கை மிளிரச் சொல்லும் கவிஞர் மரியதெரசா....

 

”இதுவரை எனது நூல்களை 18 மாணவர்கள் ஆய்வு செய்து எம்.பில். மற்றும் பி.எச்.டி., பட்டம் பெற்றுள்ளார்கள். பொள்ளாச்சியிலுள்ள கல்லூரியொன்றின் பாடத்திட்டத்தில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளது. இதுபோல் இன்னும் சில பெருமைக்குரிய அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. பல்வேறு அமைப்புகளிடமிருந்து கவியருவி, கவிமாமணி விருது, கம்பன் விருது, பாரதிதாசன் விருது என இதுவரை ஏறத்தாழ 150 விருதுகள் பெற்றிருக்கிறேன். இலக்கியவாதிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 'தமிழ்ச் செம்மல்’ விருதையும் பெற்றுள்ளேன். இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மலேசியா, அந்தமான், துபாய் என சில வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பியுள்ளேன். என் அனுபவத்தில் சொல்கிறேன்...பெண்கள் சாதிக்க நினைக்கும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்புகள் வரக்கூடும். வீட்டிலிருந்தும் முட்டுக்கட்டை விழலாம். அதையெல்லாம் பொறுமையான சமாளித்து, எடுத்துக் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் நினைத்ததை சாதிக்கலாம்” என்கிறார் தமிழகத்தின் சாதனைப் பெண் படைப்பாளியான மரியதெரசா.

 

 

 

Next Story

'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் பேசிய திரைக் கலைஞர் ரோகிணி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024

 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டாவது நாளான நேற்று அரங்கத்தில் நடைபெற்ற 'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் திரைக் கலைஞர் ரோகிணி பேசினார். மற்றும் ‘வாழ்தல் இனிது’ பற்றி ஈரோடு மகேஷ் பேசினார். இந்த நிகழ்வில் பபாசி துணைத் தலைவர் நக்கீரன் ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார். அதேபோல், பபாசி செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம் நன்றியுரை ஆற்றினார்.

Next Story

ஈரோடு புத்தகத் திருவிழா; படைப்புகளை அனுப்ப மக்கள் சிந்தனை பேரவை அழைப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

Erode Book Festival; People's Thought Council invites to send works

 

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் சிறந்த படைப்பாளருக்கு ஜி.டி.நாயுடு விருது அளிக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த விருதை பெறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், படைப்பாளர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் சில நிபந்தனைகளை வெளியிட்டிருந்தது. மேலும், அதில் ஐந்து தகுதிமிக்க அறிவியல் அறிஞர்களின் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அவர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கே இந்த விருது வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.

 

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பெயர் பெற்ற சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியான தங்களது 10 கட்டுரைகளின் தலைப்புகளையும் வெளியான இதழ்கள் மற்றும் தேதிகள் குறித்த விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆய்வு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் ஜூலை 30 ஆம் தேதிக்குள் info@makkalsinthanaiperavai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், இன்று மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு மாவட்ட படைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அதில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. அந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளும் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் மக்கள் சிந்தனை பேரவை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படைப்புகளின் பெயர் மற்றும் பிரதிகளின் எண்ணிக்கை, படைப்பாளரின் தபால் முகவரி, தொடர்பு எண், வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட முழு விபரங்கள் அடங்கிய ஒரு கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.