ஒரு வினைச்சொல் எப்படியெல்லாம் பயிலும் என்பதை அறிந்தால் வியப்பின் கொடுமுடிக்கே சென்றுவிடுவோம். எண்சாண் உடம்பில் பொருந்தியுள்ளவை எல்லாம் உறுப்புகள். உறுப்புகள் இல்லையேல் இவ்வுடலால் என்ன பயன் ? எல்லாச் செயற்பாடுகட்கும் உறுப்புகளே உதவும் கருவிகள். அதனால்தான் அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றைக்கொண்டும் எண்ணற்ற வினைச்சொற்களை ஆக்கி வழங்குகிறோம். எப்படி என்று பார்ப்போம்.
உறுப்புகளில் தலையாயது கண். அந்தக் கண்ணைக்கொண்டு எத்தனை வினைச்சொற்களை ஆக்கிக்கொள்கிறோம் தெரியுமா ? தூங்கு என்பதைக் “கண்வளர்” என்று சொல்கிறோம். தாலாட்டுப் பாட்டில் குழந்தையினைத் தூங்கு என்று சொல்லாமல் “கண்வளர்வாய்” என்பார்கள். குழந்தைக்குத் தூக்கமே கண்வளர்ச்சி. தூக்கத்தினின்று விழிப்பதைக் “கண்மலர்வாய்” என்பார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் “கண்கலந்தது” என்றும் இரங்கிய மனநிலையைக் “கண்ணோடுதல்” என்றும் கூறுவர். திருக்குறளில் கண்ணோட்டம் என்றே ஓர் அதிகாரம் இருக்கிறது. அறியாமையில் இருப்பவர்க்கு அறிவுண்டாகும்படி ஒன்றைக் கூறினால் “என் கண்ணைத் திறந்துட்டீங்க…’ என்று மகிழ்வர். இப்படிக் கண்ணைக்கொண்டே எண்ணற்ற வினைச்சொற்கள் இருக்கின்றன. கண்படுதல், கண்காட்டுதல் என்று கண்ணை முன்வைத்துத் தோன்றிய வினைச்சொற்கள் பல.
கண்ணிருந்தால் காதும் இருக்க வேண்டுமே. நம்ப முடியாதவாறு பொய்யுரைத்தலைக் ‘காது குத்துதல்’ என்கிறோம். மறைவாய் ஒன்றைச் சொல்வதைக் ‘காதுகடித்தல்’ என்கிறோம். காதினைக் குறிக்கும் இன்னொரு சொல்லான செவியையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றை ஏற்று இணங்கிக் கேட்பவன் ‘செவிசாய்க்கிறான்’. வெறுமனே கேட்டு வைப்பது ‘செவிமடுப்பது’.
கை கால்களும் உறுப்புகளாயிற்றே… அவற்றைக்கொண்டும் எண்ணிறந்த வினைச்சொற்களை ஆக்கிக்கொண்டுள்ளோம். இல்லை என்று சொல்வதைக் ‘கைவிரித்தான்’ என்கிறோம். துள்ளுகின்ற ஒருவரை அமைதிப் படுத்துவதைக் ‘கையமர்த்தினான்’ என்கிறோம். துன்பத்தில் உதவினால் ‘கைகொடுத்தான்’ என்கிறோம். சண்டையில் முடிந்தால் அது கைகலப்பாகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது கைப்பிடிப்பதாகும். துன்பத்தில் இருப்பவர்க்கு மேம்பாடடையும் வழி காட்டினால் அது கைதூக்கிவிடுவது. நட்போடு ஒன்றுபட்டால் கைகோப்பது. கையெழுத்திட்டால் அது கைநாட்டுவது. நட்டமானால் கையைக் கடிக்கிறது. அடிக்கத் துணிந்தால் கைநீட்டுவது. பணிவது கைகட்டுவது. எத்தனை எத்தனை சொற்கள் !
கைக்குச் சற்றும் இளைப்பில்லாத உறுப்பு கால். கால்களை வைத்து ஆக்கிய வினைச்சொற்கலை நினைவுபடுத்திப் பாருங்கள். குழந்தை கழித்தால் கழுவிவிடுவதைக் ‘கால்கழுவுதல்’ என்று இடக்கரடக்கலாகச் சொல்கிறோம். மதியாதார் தலைவாயில் மிதிக்கத் தயங்கும் மனநிலையைக் ‘கால்கூசுகிறது’ என்பர். கால்கொள்வது ஒன்றைத் தொடங்குவதாகும். ஒருவரைப் பணிந்து கெஞ்சுவது ‘காலைப் பிடிப்பது’. புதிதாய் ஓரிடத்தில் வெற்றியை நாட்டினால் அது ‘காலூன்றுவது’. காலின் கீழ்ப்பாகமான பாதத்தை அடி என்று சொல்கிறோம். அடியைக்கொண்டும் வினைச்சொற்கள் பல தோன்றியிருக்கின்றன. தாழ்ந்து பணிந்தவன் அடிபணிந்தான். பின்பற்றுபவன் அடியொற்றினான். ஒன்றைப் புதிதாய்த் தொடங்கியவன் அடிவைத்தான்.
முகத்தைக்கொண்டும் பல வினைச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. சினப்பது முகங்கடுப்பது. மகிழ்வது முகமலர்வது. “அவ என்கூட முகங்கொடுத்தே பேசல’ என்கிறோம். ஒருவரை அன்போடு எதிர்கொள்வது முகங்கொடுத்தலாகும். ஏமாற்றத்தாலும் துன்பத்தாலும் தளர்வது முகஞ்சுண்டுதல். அருவருப்பைக் காட்டுவது முகஞ்சுழிப்பது. கடுமையாக மறுத்தால் அது முகத்தில் அடித்தல். “என்னப்பா இப்படி முகத்துல அடிச்சாப்பல சொல்லிட்டே…”
உடலின் முதற்பேருறுப்பு தலைதான். தலையைக் கொண்டு வழங்கப்படாத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அச்சொற்கள் பரவிக்கிடக்கின்றன. ஏற்றுக்கொள்வது ‘தலையாட்டுவது.’ செத்துப் போவது ‘தலை சாய்ந்தது. தலை தொங்கியது’. பெயருக்கு எட்டிப் பார்ப்பவன் வருபவன் ‘தலைகாட்டுகிறான்’. அடங்காமல் ஆகாதன செய்பவன் ‘தலைவிரித்தாடுகிறான்’. நாணத்திற்கு ஆட்படுவது “தலைகவிழ்வது’. இழிவுக்கு ஆட்படுவது ‘தலைகுனிவது’. ஒரு செயலில் முன்வந்து பங்கேற்பது ‘தலைகொடுப்பது’. ஒன்றில் வலிந்து நுழைவது ‘தலையிடுவது’. மேன்மையுற விளங்குவது ‘தலைசிறந்தது’. முடியை ஒழுங்குபடுத்துவது ‘தலைசீவுவது’. அஞ்சிய இடத்தினின்று விரைந்தகல்வது ‘தலைதெறிக்க ஓடுவது’. தாழ்நிலையிலிருந்து உயர்வது ‘தலைநிமிர்வது’. ஒன்றை முற்றாய்த் துறப்பது ‘தலைமுழுகுவது’. இன்னும் இன்னும் நினைவிலிருந்து கூறிக்கொண்டே செல்லலாம். தலையைக்கொண்டு ஆக்காத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அவை பெருகிக்கிடக்கின்றன.
முந்தைய பகுதி:
மாட்டேனும், மாண்டேனும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #14
அடுத்த பகுதி: