நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று. நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், நான் வாசித்ததை சக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதென்பது தன்னிச்சையாக நடக்கிறது என்பதை உணர்ந்தேன்.
இக்கதைகளைத் தனியே சொன்னால் என்ன? என்ற என் நண்பனின் யோசனையை நிறைவேற்றுவதின் முன்னெடுப்பில்தான் முதன் முதலாகக் கதை சொல்ல ஆரம்பித்தது.
திருவண்ணாமலையில் பல இலக்கிய முன்மாதிரிகள் கடந்த நாற்பது வருடங்களாக நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கலை இலக்கியஇரவு, முற்றம் இதன் தொடாச்சியே இக்கதை கேட்க வாங்க என்ற மகிழ்வானதொரு உந்துதலில் கதை சொல்லத் துவங்கினேன்.
நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே நாற்பது, ஜம்பது பேர் வந்திருந்தார்கள். ஆனால் கதை நிகழிடத் தேர்வுக்கென மிகவும் மெனக்கெட்டோம்.
அழகானதொரு வளாகம் வேண்டும், மரச்செறிவினூடே செடிகளும், பூக்களும் நிறைந் திருக்கும் சூழல் வேண்டும். மனிதனின் புற வயமான சுழற்சி, சலிப்பு இவைகள் மட்டுமின்றி, அகவயமாக அவனை ஆசுவாசப்படுத்துகிற மாதிரியான இடமாக அது இருக்கவேண்டுமென ஆசைப்பட்டோம். அது அவ்விதமே அமைந்தது.
உண்மையான, அக்கறையான ஆத்மார்த்தமான தேடலின் முடிவு என்பது நீங்கள் தேடினதைக் கண்டடைவீர்கள் என்பது மீண்டுமொருமுறை சாத்தியமானது.
பார்வையாளர்களை எனக்கு மிக நெருக்கமாக உட்காரச் சொன்னோம். இடைவெளிகளைப் படைப்பு எப்போதும் நிராகரிக்கிறது. கதை சொல்லலின் போது அவர்களை நுட்பமாகக் கவனித்தேன். அவர்களின் பரவசம், துக்கம், சந்தோஷம், கண்ணீர் எல்லாவற்றையும் நான் அள்ளிப் பருகினேன்.
என் ஞாபகம் பிழையானதில்லை எனில் ஷோபாசக்தியின் விலங்குப் பண்ணைதான் என் முதல் கதை சொல்லலில்.
ஒருவாய் சோத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் அல்லாடும் ஒரு சிறுவனில் தொடங்கி, அவன் போராளி ஆன பின்பும் ஒரு ஜீப்பில், ஒரு வாய்ச் சோற்றை அள்ளி அவன் வாய்க்குக் கொண்டுப்போகும் தருணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணியைப் பற்றிச் சொல்லும் போது, நான் உடைந்தழுதேன்.
என்னோடு பார்வையாளர்களும் அழுதார்கள். எல்லோர் மனதிலும் கசிவிருந்தது. நிகழ்ச்சி முடிந்த பின்பும் இருக்கைகளை விட்டு யாரும் எழுந்திருக்கவில்லை. பேரமைதி. அது. ஒரு படைப்பாளி கோரும் அமைதி அதுதான். அது ஷோபா சக்தி என்ற ஒரு படைப்பாளியின் மகத்தானதொரு படைப்பிற்கும், எனக்கும் சேர்ந்து கிடைத்தது.
கண்ணெதிரே கிடைக்கும் வெற்றி உங்களை அதை நோக்கி இன்னும் நெருக்கமாக நகரச் செய்யும்தானே! நாங்கள் அப்படி இன்னும் கதை சொல்லலை நோக்கி நகர்ந்தோம்.
வெவ்வேறு படைப்பாளிகளின்றி, ஒரே படைப்பாளியின் மூன்று கதைகளைத் தேர்வு செய்தேன். அப்படைப்பாளியின் கூடுமானவரை எல்லாப் புத்தகங்களையும் வரவழைத்துக் காட்சிப்படுத்தினோம்.
ஆக நான் சொல்லும் கதைகள் ஒரு வாசகனுக்கான நுழைவாயில்தான். நான் அங்கு நின்றுகொண்டிருக்கிற ஒரு செக்கியூரிட்டி கார்டு. அவ்வளவுதான் நான் அந்த நுழைவாயிலுக்கு வரும் ஒரு பார்வையாளனுக்கு, அது எத்தனை அபூர்வமானதொரு அனுபவம் என்றும், அதனுள்ளே பிரவேசிக்கிறவன் வாழ்வில் எத்தகையதொரு அனுபவத்தை அடைய முடியுமென்றும் சொன்னேன். நாம் வாழ முடியாததொரு வாழ்வை வாழ்ந்து பார்ப்பதுதானே வாசிப்பு. அதை எப்படியாவது அடையுங்கள், நான் உங்கள் கைப்பிடித்து அழைத்துப் போகிறேனென ஒவ்வொருவராக கைப்பிடித்து அழைத்துப்போனேன். வாசலில் நின்று உள்ளே உள்ள உலகத்தில் எத்தனை அற்புதங்கள் நிறைந் திருக்கிறது என சொல்லுவேன். என் சொற்களை நம்பி உள்ளேப் பிரவேசிப்பவர்களுக்கு வேறோரு உலகம் காத்திருக்கிறது.
பல எழுத்தாளர்களின் கதைகளை ஒரே நிகழ்வில் சொல்வதற்குப் பதிலாக ஒரே எழுத்தாளரின் மூன்று கதைகளைத் தேர்வு செய்து சொல்வது. ஒரு மணி நேரம் கதா நிகழ்வு தொடர்ந்து அக்கதைகளின் மீதான பார்வையாளர்களின் மனப் பதிவுகள். அரங்கில் அந்த எழுத்தாளனின் எல்லா புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம் என நிகழ்வுகளைத் திட்டமிட்டோம்.
அது புத்தகங்களாகி, சொற்களாலானதொரு உலகு. அப்படி ஆயிரக்கணக்கான வாசகர்கள் அதனுள் நுழைந்தார்கள். சிலர் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள். அவர்கள் வாசிப்பின் மீது அக்கறையற்று. கதை கேட்டுவிட்டுப் போகிறவர்கள் அவ்வளவுதான். இப்பரந்த உலகில் எல்லாமும் நிகழும்தானே!
கதை கேட்பது என்பது காட்டின் தீ மாதிரி மளமளவென திசைகள் தோறும் பற்றியது. நான் முன்னிலும் எச்சரிக்கையடைந்தேன். சமூகம் நம்மைக் கவனிக்கிறது என்ற போது ஒரு படைப்பாளிக்குக் கூட வேண்டிய எச்சரிக்கை அது.
கதைத் தேர்வுகளில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் தமிழின் ஆகசிறந்த எழுத்தாளர்களின் மாஸ்டர் பீஸ் கதைகளைத் தேர்ந்தெடுத்தேன். உதாரணத்திற்கு. சா.கந்தசாமியின் மிகச்சிறந்த படைப்பு விசாரணைக் கமிஷன் அல்ல, சாயாவனமும் தக்கையின் மீது நான்குகண்களும்தான்.
கதை சொல்வது என்பதைக் கேளிக்கையாகவோ, என்னை முன்னிறுத்திக் கொள்ளவோயில்லை. அது ஒரு வேள்வி. சமூக முன்னெடுப்பு. நாற்பதாண்டு காலமாக நான் வாசித்துப் பெற்ற அனுபவத்தை என் சக மனிதனுக்குக் கடத்துவது. அது மனித உடலுறவைப் போல வலியும், சந்தோஷமும் கலந்ததொருலயிப்பு.
நான் கதைகளைச் சொல்லிக்கொண்டேயிருந்தேன். பக்கத்து மாநிலமான கேராளவிலிருந்து பஷீர், சக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, கே.ஆர். மீரா, என்.எஸ்.மாதவன், என பல எழுத்தாளர்களின் வாழ்வியல் கதைகளைத் தொடர்ந்து தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென இயங்கினேன். அது அப்படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய வாசகப்பரப்பைத் தமிழ் இலக்கியச் சூழலில் உருவாக்கிக் கொடுத்தது.
தமிழ் வாசகனுக்கு பிரபஞ்சனைத் தெரியுமளவிற்கு, சக்கரியாவையும் தெரியும் என்பது எத்தனை பெரிய வரம்.
கதைகள் சொல்லும் போது, கதைகள் மட்டும் சொல்லக்கூடாது என முடிவெடுத்தேன். அது நகலெடுத்து ஒப்பிப்பது. நான் வானொலியில் ஒலிச் சித்திரம் வாசிப்பவன் அல்ல. ஒன்றை மையப்படுத்தி இன்னொன்றை கிரியேட் பண்ணுவது. சில நேரங்களில் எழுதின எழுத்தாளனை விடவும் நீங்கள் சொல்வது இன்னும் மேலே என வாசகர்கள் குறிப்பிடுவது அதைத்தான்.
எல்லா எழுத்தாளர்களின் கதைகளும் சொல்லக் கூடியவைகள் அல்ல. மௌனி, லா.ச.ரா, திலீப்குமார் என என் கதை சொல்லும் சவாலுக்கு எதிரே நின்று என்னைப் பார்த்து என் கதைளைச் சொல்லிவிடுவாயா?என பரிகசித்த கணங்களைத் தமிழின் பெருமிதமென நினைக்கிறேன்.
ஆனாலும் நான் அவர்களையும் என்னுள் கொண்டுவர முயன்றுத் தோற்றேன். லா.சா.ராவின் பச்சைக் கனவைச் சொல்லமுடியாமல் வாசித்தேன். போகன்சங்கரின் ‘மீட்பு’ கதைக்குள் என் அந்த ரங்கத்தைப் பறிகொடுத்து மேடையில் அழுதேன்.
திலீப்குமாரின் கதையைச் சொல்லி, எனக்கும் அவருக்கும் திருப்தி ஏற்படாமல் மீண்டும் வாசித்தேன்.
இந்த வீழ்தல் எழுவதற்கான சந்தர்ப்பங்களெனப் பார்க்கிறேன்.
பெரிய தொழிற்நுட்ப அறிவில்லாதவன் நான். என் பைக் எண் கூட நினைவில் தங்காது. பட்டப் படிப்பில் நான் ட்ராப் அவுட்.
ஆனால் எனக்குப் படைப்பாளிகளின் கதாபாத்திரங் கள் அப்படியே நினைவில் தங்கிவிடுவார்கள். ஒரு வகையில் நான் அவர்களோடுதான் குடும்பம் நடத்துகிறேன்.
யமுனாவும், அம்மணியும், அலங்காரத்தம்மாளும் என் மானசீகக் காதலிகளும் கூட. கங்காவும், சுமதியும், சசியும், சுசீலாவும் அலைபாயும் என்னுள் ஜெயகாந்தனையும், பிரபஞ்சனையும், கலாப்ரியாவையும் நகுலனையும் நினைவிலிருந்து அகன்று விடாமல் ஒரு தீபத்தை இரு கைகளாலும் காற்றின் அசைவிற்குப் பாதுகாப்பது போலே பாதுகாத்துக் கொள்வார்கள்.
ஒருவகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்தான். எத்தனை அப்பா, அம்மாக்களை, சகோதரிகளை, தம்பிகளை, அண்ணன்களை, காதலிகளை, தோழமை களை உள்ளடக்கியதாக இக்கதை சொல்லல் என்னை மாற்றியமைத்திருக்கிறது.
நானறிந்து கி.ரா., ஜெயகாந்தன், பிரபஞ்சன், வேல. ராமமூர்த்தி, தனுஷ்கோடி ராமசாமி போன்ற எழுத்தாளர்கள் ஆகச் சிறந்த கதைசொல்லிகள்தான். எழுத்தாளர் சங்க மாநாட்டில் தனுக்கோடி ராமசாமி சொன்ன சிங்கிஸ் ஐஸ்மாத்தாவின் ‘அன்னை வயல்’ கதை இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. செய்யாறு கலை இரவில் வேலராமமூர்த்தி சொன்ன கோட்டைக்கிணறு கதையின் மீட்டுருவாக்கம்தான் நான் சொன்ன கோட்டைக்கிணறு.
அஸ்வகோஷ் ஆவணப் படத்திற்காக பாண்டிச்சேரிக்குப் போய் கி.ரா.வை பதிவுசெய்ய விரும்பினான். அவரை சந்தித்து நான் பவாவின் மகன் என்ற போது அவனைப் பரிவோடு கட்டியணைத்து, ‘நான் பேசுவது இருக்கட்டும் உங்கப்பா கதைகளைக் கேட்டிருக்கிறாயா? ’என கேட்டிருக்கிறார்.
‘நான்தான் பதிவு செய்வேன் தாத்தா’ என பதிலளித்து இருக்கிறான். கி.ரா. அவன் கண்களையே உற்றுப்பார்த்து, ‘உங்கப்பாவை ஒவ்வொரு அரசாங்க ஆஸ்பத்திரி பிரசவ வார்டுலயும் கதை சொல்லச்சொல்லணும், தமிழ்நாட்ல சிசேரியன் கேசே வராது’ என சிரித்திருக்கிறார்.
இது எத்தனைப் பெரியதொரு அங்கீகாரம். ஒரு மூத்த படைப்பாளியின் ஆசிர்வாதம். நான் எப்போதும் கொடுப்பவனாக அல்ல, பெற்றுக்கொள்பவனாகவே இருக்க விரும்புகிறேன்.
என் கதை சொல்லலில் எதிர் விமர்சனங்களே இல்லையா?
அப்படி உலகில் ஏதாவது இருக்க முடியுமா என்ன? சில வார்த்தைகளை நான் மீண்டும் மீண்டும் உச்சரிக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் கதைகளைக் கூடுமானவரைத் தவிர்க்கிறேன். இப்படி நிறைய.
இவைகளை நான் என்னைச் செதுக்கிக் கொள்ளும் உளியின் ஓசைகளாகவே எடுத்துக்கொள்கிறேன்.
கதை சொல்லும் போதே நான் என்னை இழக்கிறேன். நான் என்பது கரைந்து என்னிலிருந்து வழிந்துவிடுகிறது. ஜி. நாகராஜனின் கதையைப் பற்றிப் பேசும் போது, நான் தங்கம் என்ற வேசியாகவே என்னை உணருகிறேன் ஒரு ஆணின் படர்தல் என் மீது நிகழ்கிறது. நான் எப்படி பவாவாக இருக்க முடியும்?
அம்பை சொல்வது போல இலக்கியத்தில் ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள், பிராமண எழுத்தாளர்கள் சைவப்பிள்ளை எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள் என ஒரு சௌகரியத்திற்கு வாசகன் வகைப்படுத்திக் கொள்ளலாமே யொழிய, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
ஒரு பெண்ணின் பிரசவத்தை, பிரசவதற்குப் பின் அவள் வயிற்றில் விழும் வெண்கோடுகளை ஒரு பெண் எழுத்தாளரை விட சுந்தர ராமசாமி யும், சு. வேணுகோபாலும் சிறப்பாக எழுதியிருக் கிறார்கள்.
ஒரு தலித்தின் வாழ்க்கைப் பாட்டை ஒரு தலித் எழுத்தாளனை விட, தலித் அல்லாத எழுத்தாளன் இன்னும் நெருக்கமாக எழுதிவிடுகிறான்.
ஆக ஒரு கதை சொல்லியை, அவன் எதைப் பேசவேண்டும் என நீங்கள் நிர்பந்தித்து, அவனைக் கேளிக்கையாளனாக மாற்றி விடாதீர்கள்.
அவன் ஒரு காட்டாற்றைப் போல மலைகளிலும், குன்றுகளிலும், வனத்திலும், மதிலிலும் நிறைந்து கடலை நோக்கிப் போகவேண்டியவன்.
நீங்கள் அரசாங்கத்தைப் போல அணைகட்டாதிருங்கள். எனக்கென்று பெருங்கனவுகள் உண்டு. அதன் எல்லைகள் பூமியின் விளிம்புக்கும் அப்பால்.
என் பெருங்கதையாடலில் டால்ஸ்டாயும், தாஸ்தாயொவ்வேஸ்கியும், ஓரான் பாமுக்கும், கார்சியா காப்ரேல் மார்க்குவிசும் தமிழ் வாசகர் களுக்குச் சொல்லப்படவேண்டும்.
இவைகளைக் கேட்கும் காதுகள், அவர்களை நோக்கிப் பயணித்து அவர்களை அடைய வேண்டும். என் மானுட ஜீவிதம் இதற்கு எனக்கு அனுமதியளித்தால் நான் இயற்கைக்கு மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இத்தருணத்தில் என் உருவத்தையும், குரலையும் பதிவு செய்து உலகமெல்லாம் கொண்டுபோன மகன் வம்சியை, சுருதி டி.வி. கபிலன், சுரேஷ், இன்னும் என்னுடனிருந்து என்னைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு கேமராவுக்குள் கொண்டுவந்த பல நண்பர்களை மானசீகமாக கட்டியணைக்கிறேன்.
என் இந்த எளிய பயணம் இவர்களின்றி சாத்தியமில்லை. இனியும் சாத்தியப்படப் போவதுமில்லை.