பொதுவாக நதிக்கரைப் பகுதிகளிலுள்ள ஊர்களின் பெயரோடு ஆடு, யானை, மான் போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்களும் சேர்ந்தே இருக்கும். உதாரணமாக, ஆடுதுறை, கிளியனூர், குரங்காடுதுறை போன்றவற்றைச் சொல்லலாம். ஆல் போன்ற மரங்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். இதற்குக் காரணம், அப்பகுதிகளில் குடியேறிய மக்கள், அங்கு அதிகமாகக் காணப்பட்ட விலங்குகள், பறவைகள், மரங்களின் பெயரால் தங்கள் ஊரைக் குறிப்பிட்டனர். அவ்வாறு வெள்ளாற்றின் தென்கரையில் ஆம்ரவனம் என்று அழைக்கப்பட்ட வனத்தில் குச்சகன் என்னும் வேதவிற்பன்னர் மனைவி காந்தையாளோடு வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பிறக்கும்போதே உடல் முழுவதும் முடி அடர்ந்து காணப்பட்டது. வளர்ந்து வாலிபனாக மாறியபோதும் அதே தோற்றத்தில் இருந்ததால் அவருக்கு மிருகண்டு என்று பெயர் ஏற்பட்டது.(மிருகங்களுக்குதான் உடல் முழுவதும் முடி இருக்கும்.) மிருகண்டு சிவபூஜையில் அதிக ஈடுபாடு கொண்டார். தனது தோற்றத்தினால் குடும்ப வாழ்வில் ஈடுபட அவர் விரும்பவில்லை. ஆனால் அவரது பெற்றோர்கள் அவரிடம், ""பல ரிஷிகள் குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே தவம்மேற் கொண்டு சிறப்பாக விளங்கினார்கள். அதுபோல் நீயும் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என்று வேண்டினர். அவர்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார் மிருகண்டு.
பெற்றோர் மகனுக்குப் பல இடங்களில் பெண் தேடியதில், உசத்திய முனிவரின் மகள் விருத்தையைத் தேர்வு செய்தனர். அழகிலும் அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய விருத்தையை மிருகண்டுவுக்கு மணம் செய்துதர சம்மதித்தார் உசத்திய முனிவர். இந்த நிலையில் ஒருநாள் தன் தோழிகளுடன் குளிப்பதற்கு வனத்தை ஒட்டிய ஆற்றுக்குச் சென்றாள் விருத்தை. எல்லாரும் குளித்துவிட்டுத் திரும்பும்போது, கடமா எனும் யானை அவர்களைத் துரத்தியது. உயிருக்கு பயந்து திசைக்கொருவராக ஓடினார் கள் பெண்கள். மாலையில் எல்லா பெண்களும் வீடுவந்து சேர்ந்துவிட்டனர். ஆனால் விருத்தை மட்டும் வரவில்லை. மகளை யானை துரத்திய தகவலை தோழிகள்மூலம் கேட்டறிந்த உசத்திய முனிவர் ஊர் மக்களோடு மகளைத் தேடியலைந்தார். இறுதியாக புதர் மண்டிய ஒரு பாழும் கிணற்றில் விருத்தை பிணமாகக் கிடப்பதைக்கண்டு எல்லாரும் கதறியழுதனர். யானைக்கு பயந்து ஓடும் போது புதர் மறைவில் இருந்த கிணறு தெரியாமல் விருத்தை தவறி விழுந்து மரண மடைந்துள்ளாள். விஷயம் மிருகண்டுவுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் மிகவும் துடித்துப்போனார். ஊர் மக்கள், "மிருகண்டு பெண் பார்த்த நேரம் விருத்தைக்கு இப்படி நேர்ந்துவிட்டது' என்று வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டனர்.
அப்போது மிருகண்டு விருத்தையின் உடலை எரியூட்டக்கூடாது என்று தடுத்து, அந்த வனத்திலேயே எம்பெருமானை வேண்டிக் கடுந்தவமிருந்தார். தவத்திற்கு இரங்கிய ஈசன் மிருகண்டுவுக்குக் காட்சி கொடுத்ததோடு விருத்தை யின் உயிரையும் மீண்டும் தந்தார். ""நீங்கள் இருவரும் சிறப்பாக வாழ்வீர்கள். உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் எமனையும் வென்று இறவாப்புகழ் பெறுவான். அவன்தான் மார்க்கண்டேயன்'' என்று அருளினார். அப்போது மிருகண்டு முனிவரின் உடல் முழுவதுமிருந்த முடிகளும் மறைந்து முழு மனிதத்தோற்றமும் பெற்றார். விருத்தைக்கும் மிருகண்டுவுக்கும் இங்கு திருமணம் நடந்ததால் இங்குள்ள இறைவனை ஜோதீஸ்வரர், கல்யாணசுந்தர மகாதேவர் என்று அழைக்கின்றனர். அம்பாளுக்கு கல்யாண சுந்தராம்பிகை என்று பெயர் உண்டானது.
"இவ்வாலய இறைவனை வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். திருமணத்தடை அகலும். மகப்பேறு கிட்டும். பாவ விமோசனம் கிட்டும். விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பரிகாரத்தலமாகவும் இது விளங்குகிறது. மேலும் அனைத்துவிதமான துன்பங்கள், நோய்கள் நொடிகள் நீங்க இங்கே வந்து வழிபடுகின்றார்கள். மாத சிவராத்திரி, மாதப் பிரதோஷம், பௌர்ணமிப் பூஜை உட்பட அனைத்து சிவவழிபாடுகளும் முறையாக நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இங்குவந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வேண்டியதை வேண்டியபடி வழங்கி வருகின்றனர் எங்கள் ஈசனும் பார்வதியும்'' என்கிறார்கள் .
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூர் அருகே உள்ளது திருமாந்துறை டோல்கேட். அங்கிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டரில் உள்ளது திருமாந்துறை ஊரும், ஆலயமும்.