
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கி நடைபெற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் அடைந்திருந்தார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக தோணி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். சீசன் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். எனவே தோணியே எஞ்சிய போட்டிகளில் அணியை வழிநடத்துவார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ப்ளெமிங்க் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தோணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது சென்னை அணிக்கு தோணி கேப்டனாக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியானது ஏப்ரல்11 (நாளை), 14, 20, 25, 30 மற்றும் மே 3, 7, 12, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது.