உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்நோய் தாக்கியுள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்களுக்கு முடிந்த வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் கெப்சிரிஸ் கூறுகையில், " கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் இரட்டிப்பு நிலையை எட்டியுள்ளது. கரோனா தொற்றால் சமூக, அரசியல், பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அடுத்துவரும் நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும். உயிரிழிந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கும்" என்று தெரிவித்துள்ளார்.