அமெரிக்க நிதி நிலைக்குழு தலைவராக நியமிக்கப்பட இருக்கும் நீரா டாண்டனுக்கு குடியரசுக்கட்சி செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரின் நியமனத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன், வரும் ஜனவரி மாதம் அந்நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தனது ஆட்சியில் முக்கிய பதவிகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறார் பைடன். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இடம்பெற்றுள்ளனர். அந்தவகையில் அமெரிக்க நிதி நிலைக்குழு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டனை தேர்ந்தெடுத்துள்ளார் பைடன். ஆனால், அமெரிக்க நிதி நிலைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் செனட் சபை வாக்கெடுப்பில் ஒப்புதல் பெறவேண்டியது அவசியமாகும். இந்நிலையில், கடந்த காலங்களில் ட்ரம்ப்பின் குடியரசுக்கட்சியை கடுமையாக விமர்சித்துவந்த நீராவை நிதி நிலைக்குழு தலைவராக நியமிக்க குடியரசுக்கட்சி செனட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், செனட் உறுப்பினர்களின் ஆதரவு நீரா டாண்டனுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.