வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பும் செய்திகள் 7 நாட்களில் மறைந்து போகும் வகையில் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட இருக்கிறது.
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் செய்திகளைப் பகிர்வதற்கும், தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் பல செயலிகள் உள்ளன. அவற்றுள் பரவலான மக்களால் பயன்படுத்தக்கூடிய செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. மற்ற செயலிகளை விட இதன் வேகமும், எளிமையாகக் கையாளும் முறையும் சாதாரண மக்கள் பயன்பாடு முதல் அலுவலகப் பயன்பாடு வரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இதனை மாற்றியிருக்கிறது.
அதே வேளையில் வாட்ஸ்அப் நிறுவனமும் பயனாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பும் செய்திகள் 7 நாட்களில் மறைந்து போகும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
அதன்படி, பயனாளர் ஒருவர் சக பயனாளருக்கு மெசேஜ் செய்யும் போது, அந்த மெசேஜ் 7 நாட்களில் காணாமல் போய்விட வேண்டுமா அல்லது நிரந்தரமாக அவர் ஃபோனில் இருக்கலாமா என்று தீர்மானிக்கலாம். அந்த 7 நாட்களில் பயனாளர் வாட்ஸ்அப் பயன்படுத்தாமல் இருந்து குறிப்பிட்ட அந்த மெசேஜை சக பயனாளர் கவனிக்காவிட்டாலும் இவ்விதி பொருந்தும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு செய்தியைப் பகிரும் போது, இந்த முடிவானது குழு அட்மினால் மட்டுமே எடுக்க முடியும்.
மேலும், 7 நாட்களில் காணாமல் போகும் முறையில் அனுப்பும் ஒரு செய்தியை மற்றவருக்குப் பகிர்ந்தாலோ அல்லது அதைக் குறிப்பிட்டு பதிலளித்தாலோ, பகிரப்பட்ட செய்தியும், பதிலளிக்க குறிப்பிட்ட செய்தியும் காணாமல் போகாது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என இரு இயங்குதளங்களிலும் இப்புதிய அப்டேட்டானது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.