அமெரிக்க நாட்டின் அதிபராக பதவியேற்றுக் கொண்டார் ஜோ பைடன்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபராக ஜோ பைடனுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவியேற்பு விழாவையொட்டி, வாஷிங்டனில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 25,000 வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
78 வயதாகும் ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார்.
அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.