தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றுவரும் 42 - வது கூட்டத்தில் பங்கேற்கவும், மற்றும் உலக தமிழர்களுடனான பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் கடந்த 22 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு ஒரு வார கால சுற்றுப்பயணமாக ஜெனீவா சென்றுள்ளார்.
ஜெனீவா சென்றுள்ள அவர், நேற்று (26.09.2019) மாலை ஐ.நா.வின் பிரதான அவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அங்கு ஐநாவின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இரண்டு அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றினார் வேல்முருகன்.
அந்த உரையில் அவர் கூறியதாவது "1948 ஆம் ஆண்டு பிரிட்டானியர்கள் இலங்கை விட்டு சென்றவுடன் சிங்களர்களின் கைவசம் அந்நாடு சென்றது. 1956 ஆம் ஆண்டு மொழியுரிமை, கல்வியுரிமை ஆகியவை பறிக்கப்பட்டுவிட்டன. 1976 ஆம் ஆண்டு தமிழீழம் என்ற தனி நாடு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 1983 ஆம் ஆண்டு 3000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ச்சியான போராட்டங்கள் வன்முறையால் ஒடுக்கப்பட்டதால் ஆயுத போராட்டம் எடுக்க வேண்டிய சூழலுக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். 2002 ஆம் ஆண்டு நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழர்கள் பகுதி தன்னாட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது".
இவர் மேலும் பேசுகையில் "2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடந்த போரில் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்டனர். போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. இலங்கை ராணுவத்தால் பறிக்கப்பட்ட நிலங்கள் திருப்பி தரவில்லை. இதுபோன்று நிறைய மனித உரிமை மீறல் அந்நாட்டில் நடக்கிறது " என்றும் " ஒரு சர்வதேச விசாரணை இல்லாமல் தமிழருக்கான நீதி கிடைக்காது" என்று தன்னுடைய உரையில் கூறினார்.