இந்தியா மீதான பொருளாதாரத் தடை குறித்த தீர்மானம் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, ரஷ்யாவிடம் இருந்து ஐந்து புதியவகை எஸ்- 400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ராணுவ வலிமையை அதிகரிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கக்கூடாது எனவும், மீறி வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியா ரஷ்யா உடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிகாரிகள் இந்தியா மீதான பொருளாதாரத் தடை குறித்த தீர்மானம் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ், "இந்தியா ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்துத் தகுந்த திட்டமிடலுடன் முடிவெடுக்க வேண்டும். இந்தியா பொருளாதார ரீதியாகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. எனவே, அதனைக் கருத்தில்கொண்டு ராஜதந்திர நீதியாக, அரசியல்ரீதியாக பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ரஷ்யா ராணுவத் தளவாடங்களைப் பிற நாடுகளுக்கு விற்று அதன் மூலம் பெரும் நிதியைக் கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவேதான் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளது. ரஷ்யாவிடம் ராணுவத் தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும். இந்தச்சூழலில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவத்தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எங்களிடம் அதிநவீன தளவாடங்கள் உள்ளன. இந்தியா அதன் முடிவு குறித்து யோசிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.