அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. பதவியேற்பு விழாவுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்தனர். மேலும் முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரும் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, ஜோ பைடனின் பதவியேற்பு விழாவை புறக்கணித்து விட்டு ஃபுளோரிடாவிலுள்ள பண்ணை வீட்டிற்கு டொனால்ட் ட்ரம்ப் சென்றார். இருப்பினும் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் தற்போதைய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்றுள்ளார்.
கடந்த காலங்களில் பதவியேற்பு விழாவை காண சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், கரோனா காரணமாக தற்போது பதவியேற்பு விழாவை காண 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவியேற்பு விழா நடைபெறும் வாஷிங்டனில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 25,000 வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலால் அவரச நிலையும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் கமலா ஹாரிஸ். இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.