பிலிப்பைன்சிலுள்ள ஜோலா தீவில் உள்ள சர்ச் ஒன்றில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின்போது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இரு முறை குண்டுகள் வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 77 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிலிப்பைன்சில் பெரும்பான்மையினராக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். சிறுபான்மையினராக இஸ்லாமியர்கள் உள்ளனர். அங்குள்ள இஸ்லாமியர்கள் தனி நாடு கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிபரின் முடிவின்படி தனி நாடு வழங்குவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள் தனி நாட்டிற்கு எதிராக வாக்களித்ததால், அந்த பகுதியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 50 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் இதுவரை 1,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப காலத்தில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் ஈடுபட்டு வரும் அபு சாயப் என்ற தீவிரவாத அமைப்பு கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இடங்களில் குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்நாட்டு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.