இஸ்ரேல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் சமயத்தில், எகிப்தில் இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் -அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரை அறிவித்து வான்வெளி, தரைவழி என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இரு தரப்பு மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எகிப்து நாட்டில் இஸ்ரேலியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் மத்திய பகுதி அலெக்சாண்டிரியாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அங்கு ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அந்த நகரிலுள்ள பாம்பே தூண் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூடியிருந்தனர். திடீரென, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு போலீஸ் அதிகாரி, துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதில், மூன்று பேர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். அதில், இருவர் இஸ்ரேல் நாட்டு பயணிகள் எனவும் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, வன்முறையை நிகழ்த்திய போலீஸ் அதிகாரியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து அவ்வாறு நடந்து கொண்டேன் என்று கூறியதாகத் தெரிகிறது.