இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று (12/05/2022) மாலை பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைக்கப்படுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த புதன்கிழமை இரவு அறிவித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் பிரதமராக விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தார்.
இச்சூழலில் ரணில் பிரதமராவதற்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜி ஜன வளவேகையாவின் ஒரு பிரிவினர் மற்றும் பல கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கே அதிபர் முன்னிலையில் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவரான ரணில் விக்ரமசிங்கே பிரதமராகப் பதவியேற்றபின் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான 73 வயது ரணில் விக்ரமசிங்கே, இதுவரை ஐந்து முறை இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரதமரானார். கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணிலின் கட்சி ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற்றது.
இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு, மஹிந்த ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் தலைமையில் 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை (13/05/2022) பதவியேற்க உள்ளது.