திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு உலகம் முழுவதிலிருந்து பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் ஒருங்கே கலந்துகொண்டு கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தினர். த.மு.க தலைவர் நாகதேவன், செயலாளர் அன்பழகன், பாதுகாப்பு மன்றத் தலைவர் தேவதாஸ், த.மு.க திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தவமணி மனோகரன் ஆகியோர் கலைஞரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் திரு.பால் சத்தியநேசன், மற்றும் திரு.முருகானந்தன் ஆகியோர் கலைஞர் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
அனைவரும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தியும், கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்த் தூவியும் மரியாதை செலுத்தினர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இயற்கை எய்தியதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம். தந்தை பெரியாரின் சீடராக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக வலம் வந்த கலைஞர் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். கலைஞர் அவர்களை இழந்து வாடும் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் கலைஞர் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த நேரத்தில் இலண்டன் 'தமிழர் முன்னேற்றக் கழகம்' சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்தும் மறையாத மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம்! என்றும் தங்களது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளனர்.