ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்வேறு நாடுகளும் ஆப்கானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள தலிபான்கள், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதால் நம்பிக்கையுடன் பணிகளைத் தொடங்க வேண்டும் என அரசு ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் அரசை பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்துவரும் நிலையில், ரஷ்யா இது தொடர்பாக ஆலோனை நடத்திவருகிறது. இதில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள, காத்திருக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக நேற்று 129 இந்தியர்கள் அழைத்துவரப்பட்ட நிலையில், இன்று 120 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 2 ஆவது விமானம் 120 பேருடன் தாயகம் திரும்பிய நிலையில், இந்திய விமானப்படையின் மீட்பு விமானம் தற்பொழுது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தரையிறங்கியுள்ளது.