ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 31 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காபூலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் அரசு அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் அலுவலகத்திற்கு வந்த நபர், அதன் வாசலில் வைத்து தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இந்தத் தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கோர தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. தாலிபன் செய்தியாளர் இந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என மறுத்துள்ளார்.