உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு எதிராக, சில நாடுகள் தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அதில், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்து மக்களுக்குச் செலுத்தத் தொடங்கியது மட்டுமில்லாமல், பல்வேறு உலக நாடுகளுக்கும் வழங்கின.
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் பிற நாடுகளுக்கும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், டென்மார்க் நாடு, இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி, தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, ருமேனியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அதே காரணத்தைக் கூறி தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளதோடு, தாங்கள் அந்த தடுப்பூசி குறித்து ஆய்வுசெய்து செய்து வருவதாகவும் கூறியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், தடுப்பூசியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடரப்போவதாக தெரிவித்துள்ளன. 'ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனெகா' தடுப்பூசியை இந்தியாவில், சீரம் நிறுவனம் 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.