உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தினசரி கரோனா பாதிப்பு, மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது. இந்த 3,623 பேரில் 1,409 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு 2,214 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக உலக நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 'டெல்டாக்ரான்' என்ற பெயரில் மற்றொரு வைரஸின் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக அளவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைப்ரஸ் நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கலந்த ஒரு புதிய மாறுபாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியர் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் மேற்கொண்ட ஆய்வின்படி இதுவரை 25 பேர் இந்த புதிய திரிபால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த 'டெல்டாக்ரான்' மாறுபாடு மிகவும் ஆபத்தானதா இல்லையா என்பது போகப் போகத் தான் தெரியும் என்கிறார் பேராசிரியர் லியோண்டியோஸ்.