உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாக போர் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததை அடுத்து அதிபர் செலன்ஸ்கி போரில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியதாகவும் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. அதிபர் செலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளரும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார். அதிபர் செலன்ஸ்கியின் கார் மீதும் அவரது பாதுகாப்பு வாகனம் மீதும் மற்றொரு கார் மோதியதால் விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அதிபர் உடன் சென்ற மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவருக்கும் அவரது ஓட்டுநருக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தான் ரஷ்யாவிடம் இழந்த பகுதியை மீண்டும் மீட்டுள்ளது உக்ரைன். சமீபத்தில் மீட்கப்பட்ட இஷ்யும் பகுதிக்கு பார்வையிட சென்ற அதிபர் செலன்ஸ்கி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ரஷ்யாவால் உக்ரைனில் நடந்ததை நீங்கள் பார்க்கலாம். ஆனால் நாங்கள் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று நாங்கள் மீண்டு வந்துள்ளோம்” எனக் கூறினார்.
உக்ரைனில் பயின்று வந்த இந்திய மாணவர்களையும் இந்திய அரசு மீட்டது. இந்நிலையில் உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.