முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள் என ஃபிலிப்பைன்ஸ் அரசு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், பல்வேறு உலக நாடுகள் இந்த பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்தோ, சிகிச்சை மருந்தோ இதுவரை பொதுவெளியில் வராத நிலையில், சமூக இடைவெளியும், தன்சுகாதாரமுமே இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது நோய்ப் பரவலைத் தடுக்க உதவும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதனையடுத்து பல்வேறு நாடுகளிலும், பொதுவெளியில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டயாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுதொடர்பான தொடர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், மக்கள் சில நேரம் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றும் சம்பவங்களும் வாடிக்கையாகி வருகின்றன. இதனால் நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள சூழலில், மக்களை முகக்கவசம் அணியவைக்கப் பல நாடுகளும் பல்வேறு வழிகளைப் பின்பற்றி வருகின்றன. அந்தவகையில் முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஃபிலிப்பைன்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபிலிப்பைன்ஸில் இதுவரை 68,898 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,835 பேர் பலியாகி உள்ளனர்.