சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை பாகிஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அசாம் நசீர் தரோர் நேற்று முன் தினம் மின்னணு குற்றத் தடுப்பு சட்டத்தை அறிமுகம் செய்து தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் மூலம், சமூக ஊடகங்களில் சட்ட விரோத மற்றும் புண்படுத்தும் உள்ளடகத்தை தடுப்பதற்கு உத்தரவிடவும், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்யவும் அதிகாரம் கொண்ட நிறுவனத்தை உருவாக்கப்படும்
இந்த புதிய சட்டத்தின் கீழ் சமூக ஊடக தளங்கள், புதிய சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டத்தை பின்பற்ற தவறினால், தற்காலிக அல்லது நிரந்தர தடைகளை எதிர்கொள்ள நேரிடும். சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பினால் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பாகிஸ்தான் அரசின் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் கூறுகையில், ‘முன்மொழியப்பட்ட சட்டம் பேச்சு சுதந்திரத்தை மேலும் நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு உரிமைகளுக்காக வாதிடும் குரல்களை நசுக்குவதற்கு இந்த மசோதா ஒரு அடித்தளத்தை அமைக்கும்’ என்று கூறினார்.