ஜப்பான் வான்பரப்பில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளைப் பரிசோதித்து வரும் நிலையில், அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு, போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு வந்துள்ளதால் கொரிய தீபக்கற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்று (19/11/2022) 15,000 கி.மீ. தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளது. ஏவுகணை சோதனையை முதன்முறையாக பொதுவெளியில் தனது இளைய மகள் கிம் ஜூ உடன் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனிடையே, வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பி-1பி ரக குண்டு வீச்சு விமானங்கள் தென்கொரியா வந்துள்ளன.
அந்த விமானங்கள் கூட்டுப்பயிற்சிக்காக வந்திருப்பதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.