கரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தான அவிஃபாவிர் மருந்தை இறக்குமதி செய்ய பல உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கரோனா சிகிச்சைக்கான முதல் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகப் பெயர்பெற்றுள்ள அவிஃபாவிர் மருந்து ரஷ்யாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யத் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருந்தினை இறக்குமதி செய்ய 10-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்களை அணுகியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த மே 29 அன்று, அவிஃபாவிர் மருந்தினை ரஷ்ய சுகாதார அமைச்சகம் கரோனா சிகிச்சைக்கான அதிகாரபூர்வ சிகிச்சை மருந்தாக அங்கீகரித்தது. இதனையடுத்து ஏற்று முதல் ரஷ்யாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து விநியோகம் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், இதுகுறித்து பேசியுள்ள ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ், "ரஷ்யா முழுவதும் இந்த மருந்துக்கு அதிக தேவை உள்ளது, நாட்டின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த மருந்தை விநியோகிக்க ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அவிஃபாவிர் மருந்தை இறக்குமதி செய்வதற்கான கோரிக்கைகளையும் நாங்கள் பெற்றுள்ளோம். மருத்துவப் பரிசோதனைகளின் ஆரம்ப முடிவுகளின்படி, உலகளவில் கரோனா சிகிச்சைக்கான மிகச்சிறந்த மருந்து இதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.