ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடையும் விதித்துள்ளது. யூடியூப், ஃபேஸ்புக், சோனி மியூசிக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் சேவை நிறுத்தி ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் அரசு ஊடகம் ஒன்றில் நேரலையில் பெண் செய்தியாளர் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் 'நோ வார்' என்ற வாசகங்கள் நிரம்பிய பதாகையைக் காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'நோ வார்' என்று ஆங்கிலத்திலும், போர் குறித்து ரஷ்ய அரசு சொல்லும் பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம் என ரஷ்ய மொழியிலும் அந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது. இதனால் உடனடியாக நேரலை நிறுத்தப்பட்ட நிலையில் உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மரினா என்ற அந்த பெண் ஊழியரைக் கைது செய்தனர்.