Skip to main content

பதறவைக்கும் சிசிடிவி காட்சி; தறிகெட்டு ஓடிய டெஸ்லா கார்; விசாரணையில் இறங்கிய போலீஸ்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Tesla car accident that lost control due technical fault

 

டெஸ்லா கார்விபத்து சம்பவத்தில், அதன் பின்னணியைக் கண்டுபிடிக்க அமெரிக்க நிறுவனத்தின் உதவியை நாட உள்ளூர் காவல்துறை முடிவு செய்ததையடுத்து தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சீன நாட்டின் தெற்கு மாகாணத்தில் குவாங்டன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி காலை 6.30 மணியளவில், ஷான் எனும் 55 வயது முதியவர் டெஸ்லா மாடல் ஒய் வகை கார் ஒன்றை ஓட்டி வந்தார். அந்த டெஸ்லா காரை ஒரு கடைக்கு அருகில் பார்க் செய்வதற்காக அந்த முதியவர் வலதுபக்கம் திரும்பியுள்ளார். அப்போது, பிரேக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த டெஸ்லா கார் புயல் வேகத்தில் பறக்கத் தொடங்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கட்டுக்கடங்காத காளை போல் மாறியது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் என்ன செய்வது எனத் தெரியாமல் விபத்து எதுவும் ஏற்படாமல் தடுக்க பெரிதும் முயற்சித்தார். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மக்கள் நிறைந்த சாலையில் மின்னல் வேகத்தில் சென்ற டெஸ்லா கார் கடைசியில் ஒரு சுவற்றில் மோதி தடம் புரண்டது. இந்த விபத்து சம்பவத்தில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து டெஸ்லா நிறுவனம் கூறும்போது, “டெஸ்லா காரில் ப்ரேக் ஃபெயிலியர் என்ற கருத்தை ஏற்க முடியாது. ஆனால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.” எனத் தெரிவித்தது.

 

இந்நிலையில், இந்தக் கார்விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய காவல்துறைக்கு உதவுவதாக அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய தற்போது மூன்றாம் தரப்பு மதிப்பீட்டு நிறுவனத்தை போலீசார் நாடியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Elon Musk's visit is suddenly canceled!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, எலான் மஸ்க் நாளை (21-04-24) இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த பயணம் திடீரென ரத்தாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை புரிவதை தாமதப்படுத்த்தியுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.