பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், 1990 களில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தபோது, அதன் தலைவராக பொறுப்பேற்று அந்த நிறுவனத்தை மீட்டெடுத்தவர் கார்லோஸ் கோன். நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த இவர் ஜப்பானில் இருந்து லெபனான் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
![nissan former chief escaped to lebanon](http://image.nakkheeran.in/cdn/farfuture/ktES5B8JfeSffka5E2rv_H-P3kjOy66oSSn0F3Zq72s/1577945487/sites/default/files/inline-images/fngfngfn.jpg)
பிரேசில் நாட்டில் பிறந்த கார்லோஸ் பிரேசில், பிரான்ஸ், லெபனான் ஆகிய மூன்று நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிசான் நிறுவனத்தின் தலைவராக இருந்த கார்லோஸ் கோன், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட கார்லோஸ், 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜாமினில் வெளிவந்தார். வெளிநாடு செல்லக்கூடாது, கணினி, அலைபேசி பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் டோக்கியோ நகரில் தங்கியிருந்த கார்லோஸ், தான் லெபனான் சென்றுவிட்டதாக சில நாட்களுக்கு முன் திடீரென அறிவித்திருக்கிறார்.
பலத்த காவலில் இருந்த அவர், எப்படி தப்பித்தார் என்பது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. டோக்கியோவில் உள்ள கார்லோஸ் வீட்டில் கிரிகோரியன் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அப்போது அவர்கள் உதவியுடன், இசைக்கருவி வைக்கும் பெட்டிக்குள் மறைந்து அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனி விமானம் மூலம் துருக்கி வழியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு கார்லோஸ் கோன் சென்றதாக சொல்லப்படுகிறது.