நேபாளத்தில் விமான விபத்து நிகழ்ந்ததில் தற்போது வரை 67 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பொக்காரா விமான நிலையத்திற்கு எட்டி ஏர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 72 இருக்கைகள் கொண்ட விமானத்தில் 68 பயணிகளும் 4 ஊழியர்களும் பயணித்துள்ளனர்.
விமானம் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது மோசமான வானிலையின் காரணமாக விபத்துக்குள்ளானது. பழைய விமான நிலையம் மற்றும் பொக்காரா விமான நிலையத்திற்கு இடையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் விமானம் தீப்பற்றி எரிந்தது. பயங்கர விபத்து நிகழ்ந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது நெடுநேரமாகத் தெரியவில்லை.
மீட்புக் குழுவினர் வந்த பின் தீயினை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை 67 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் 53 பேர், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், கொரியாவைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 68 பேர் பயணம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளத்தில் நாளை அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.