முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை: ’முல்லைப்பெரியாறு அணையின் கீழ்ப்புறத்தில் புதிய அணைக் கட்டுவதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கேரள அரசின் முயற்சிக்கு மத்தியச் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. முல்லைப்பெரியாற்று அணையின் குறுக்கே புதிய அணைக் கட்டினால் தமிழகத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கட்ட முடியும் என்று 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறபோது, அதனைத் துளியளவும் மதியாது மத்தியச் சுற்றுச்சூழல்துறை கேரள அரசிற்கு அனுமதி வழங்கியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கிற அதிகார அத்துமீறல். தமிழகத்தின் உணர்வையும், உரிமையையும் காலில் போட்டு மிதித்துப் புறந்தள்ளுகிற தான்தோன்றித்தனம். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இப்பச்சைத்துரோகத்தை இனமானத்தமிழர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை ஆளும் வர்க்கம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள 2 இலட்சம் ஏக்கருக்கு மேலான வேளாண் நிலங்களின் நீர்த்தேவையினையும், பலகோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் நிறைவுசெய்துவரும் முல்லைப் பெரியாற்றின் கீழ் புதிய அணை கட்ட அனுமதியளித்திருப்பது முல்லைப்பெரியாற்று உரிமையை மொத்தமாகக் கேரளாவிற்குத் தாரைவார்க்கும் கொடுஞ்செயல். இதன்மூலம் முல்லைப்பெரியாற்றில் வரும் சொட்டு நீரும் தமிழகத்திற்கு இனி சொந்தமில்லை என்கிற நிலை உருவாகிறப் பேராபத்து உள்ளது.
முல்லைப்பெரியாற்று அணையின் கீழ்ப்பகுதியில் 1214அடி நீளம், 174.6 அடி உயரம் என்கிற விகிதத்தில் புதிய அணையும், அதற்குத் துணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது. கேரள மாநிலம், பீர்மேடு வட்டத்திலுள்ள, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிற இப்புதிய அணை கட்டப்படுகிற இடம், வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது. 6,63 கோடி திட்டமதிப்பீட்டில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தின் மூலம் 0.017 டி.எம்.சி அதிக நீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும். அதேநேரத்தில், முல்லைப்பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதியானது நீரில் மூழ்கும் ஆபத்திருக்கிறது என்பதன் மூலம் சுற்றுச்சூழல் சமன்பாட்டுக்கு இப்புதிய அணை எதிரானது என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவிட்டதோடு, பேபி அணையைப் பலப்படுத்தி அணையின் மொத்த கொள்ளளவான 152 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் வழிகோலியது 2014ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால், கேரள அரசோ இதற்கு நேர்மாறாக அண்மையில் கேரளாவில் பெய்தப் பெருமழையினைக் காரணம் காட்டி புதிய அணை கட்டுவதற்குரிய அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்துப் பெற்றிருக்கிறது. கேரளப் பெருவெள்ளத்திற்கு மலைகளைக் குடைந்து சாலைகள், விடுதிகள், சுரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டத்ததும், மின்சார உற்பத்திக்காக தேவையற்று அணைகள் கட்டப்பட்டதுமே முதன்மைக் காரணங்களென ஆய்வுகள் அறுதிபடத் தெரிவிக்கின்றன. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கியதற்கு அதிகப்படியான மழைப்பொழிவுதான் காரணமே ஒழிய, முல்லைப் பெரியாறு போன்ற அணைகள் அல்ல என மத்திய நீர் ஆணையமும் தெளிவுப்படுத்தி (சிடபிள்யுசி) அறிவித்துவிட்டது. இருந்தபோதிலும், புதிதாக அணை கட்டக் கேரள அரசு துடியாய் துடிக்க வேண்டியத் தேவையென்ன? முல்லைப்பெரியாற்று அணை உறுதியாக இருப்பதை உச்ச நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டப் பிறகும், புதிய அணை கட்ட ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியமென்ன என்கிற வினாக்களுக்கு இதுவரை விடையளிக்கப்படவில்லை.
மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியென அறிவித்திருக்கிற கஸ்தூரி ரங்கன் தலைமையிலான மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆணையத்தின் அறிக்கையின்படி, முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணைகட்டுவது என்பது முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் சீர்கேட்டை விளைவிக்கும் எனத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. மாமனிதர் பென்னி குக் அவர்களால் தமிழர்களுக்காகக் கட்டப்பட்ட முல்லைப்பெரியாற்று அணையினைத் தங்களுக்கானதாகச் சொந்தம் கொண்டாடுகிற கேரள அரசு, அவற்றை செயலிழக்கச் செய்துவிட்டு புதிய அணையினைக் கட்டிப் பயன்பாட்டுக் கொண்டு வருவதன்மூலம் முல்லைப்பெரியாற்று உரிமையினை தாங்களே முழுமையாக அபகரித்துக் கொள்ளப் பெரும் சதிச்செயல் புரிகிறது என்பதனை எச்சரிக்கையுணர்வோடு அணுக வேண்டும்.
எனவே, முல்லைப்பெரியாற்றின் கீழ்ப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆராயக் கேரள அரசுக்கு அனுமதி அளித்திருக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், முல்லைப்பெரியாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் சதிச்செயல்களுக்கு ஒருபோதும் துணைபோகக் கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரியச் சட்டப்போராட்டங்களையும், அரசியல் அழுத்தங்களையும் கொடுத்து முல்லைப்பெரியாற்று உரிமையை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறேன்.’’