கரோனா பரவலைத் தடுப்பதில் இந்தியா போன்ற நாடுகள்தான் உலகிற்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,700 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,86,406 ஆக உயர்ந்த நிலையில் 1,02,393 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் அதிகபட்சமாக 6,077 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சீனாவில் 3,277 பேரும், ஸ்பெயினில் 2,311 பேரும், ஈரானில் 1,812 பேரும், அமெரிக்காவில் 582 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு குறித்துப் பேசிய உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான், "இந்தியாவில் கரோனா வைரஸ் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட இதுபோன்ற நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு நோய்களை ஒழிப்பதில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்தது. இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது. எனவே, இந்தியா போன்ற நாடுகள் முன்பு போலவே இப்போதும் உலகிற்கும் வழிகாட்டியாக இருப்பது முக்கியமானது" எனத் தெரிவித்தார்.